பல நாடுகளில் படித்த விவசாயிகள் சிலர், தங்கள் ஆள்பற்றாக்குறையை போக்க அறிவியலை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அறுவடை செய்யும் இயந்திரம், நாற்று நடும் இயந்திரம், களை பறிக்கும் இயந்திரம் என அனைத்தும் தற்போது நவீன மயமாகிக்கொண்டே வருகிறது. இவை அனைத்துக்கும் உச்சக்கட்டமாக தற்போது விவசாயிகள் செயற்கை நுண்ணறிவையும் விவசாயத்தில் புகுத்தத் தொடங்கியுள்ளனர்.
தோட்டத்தில், களைகள் உள்ள இடத்தை மட்டும், கம்ப்யூட்டர் தொழில்நுட்ப உதவியுடன் அறிந்து, லேசர் கதிர்வீச்சு வாயிலாக களைகள் அகற்றப்படுகின்றன. ‘வாட்ஸ்ஆப்’, ‘டெலிகிராம்’ வாயிலாக குழுக்களை தொடங்கி, அதன் வாயிலாகவே, வர்த்தக விசாரணை மேற்கொண்டு, தங்களின் விளை பொருள்களை விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், நைஜீரியா நாட்டிலும் விவசாயிகள் ஏ.ஐ வாயிலாக விவசாயம், கோழி வளர்ப்பில் விவசாயிகள் அதிக விளைச்சலையும் லாபத்தையும் ஈட்ட தொடங்கியுள்ளனர். நைஜீரியாவின் மொத்த வருவாயில் 20 சதவிகிதம் விவசாயத்தில் இருந்து கிடைக்கிறது. மாறிவரும் கால நிலை பெரும் சவாலாக இருந்தாலும், நைஜீரியாவில் விவசாயிகள் ஏ.ஐ தொழில்நுட்பம் வழியாக விவசாயத்தில் வெற்றி பெற தொடங்கியுள்ளனர். farmers use AI in nigeria
ஜாஸ் என்ற நகரில் தன்டம் நான்கர் என்பவர் ஏ.ஐ தொழில்நுட்பம் வழியாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது முதல் உரம் அளிப்பது வரை பணிகளை மேற்கொள்கிறார். இதனால், 400 கிலோ அவரின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இது கிட்டத்தட்ட 20 சதவிகித விளைச்சல் அதிகமாகும். இதற்காக கிரீன் ஈடன் என்ற நிறுவனம் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அளித்துள்ளது. இந்த நிறுவனம்தான் நைஜீரியாவிலுள்ள 70 சதவிகித விவசாயிகளுக்கு ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அளிக்கிறது.
நைஜீரியாவில் ஜாஸ் நகரம்தான் விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தி வெற்றி காண்பதில் முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும், மெர்சி அட்சுகு, மற்றொரு உள்ளூர் ஸ்டார்ட்-அப் நிறுவனத்திடமிருந்து ஏ.ஐ. தொழில்நுட்பத்தை வாங்கி தனது கோழிப்பண்ணையை நடத்துகிறார். இந்த தொழில்நுட்பம் கோழிப்பண்ணையில் வெப்ப நிலை, ஈரப்பதம், நீரின் தரத்தை கண்காணித்து தகவல் அளிக்கிறது.
இது குறித்து மெர்சி கூறுகையில்,’ வெப்பநிலை அதிகமாக இருந்தால் கோழிகள் உணவு எடுப்பதில்லை. கோழிகளுக்கு வைக்கப்படும் குடிநீர் தரமற்றது என்றால் அது கோழிகளுக்கு எதிராக மாறி விடும். இந்த தொழில்நுட்பத்தை புகுத்திய பிறகு, அரிதாகவே கோழிகள் இறக்கின்றன. பண்ணையில் என்ன நடந்தாலும் எனக்கு தகவல் வந்துவிடும். இந்த தொழில்நுட்பம் வந்த பிறகு, இரவு நேரத்தில் எழுந்து சென்று கோழிகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. 150 டாலர்கள் கொடுத்து இந்த தொழில்நுட்பத்தை வாங்கினேன். இதன் காரணமாக எனக்கு மன அழுத்தமும் வெகுவாக குறைந்துள்ளது ‘ என்கிறார். farmers use AI in nigeria
காலநிலை மாற்றம் காரணமாக, விளைச்சல் குறைவு காரணமாக நைஜீரியாவில் விவசாயிகள் தங்கள் தொழிலை மாற்றி விட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் மீண்டும் விவசாயத்துக்கு திரும்ப தயங்குகின்றனர். எனினும், ஏ.ஐ தொழில்நுட்பம் வந்த பிறகு, நைஜீரியாவில் எஞ்சியுள்ள விவசாயிகள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.