பெருமாள்சாமியின் கதை
ஒற்றை நாற்று நடவு முறை!
தலைமேல ஆப்பிள் விழுந்ததால புவிஈர்ப்பு விசையை கண்டுபிடிச்சாங்க. அதேபோல,
எதேச்சயா முளைச்ச நெற்பயிரிலிருந்து விதைநெல்லை எப்படி கையாள்வது என்பதைக் கண்டுபிடிச்சிருக்காரு நம்ம பெருமாள் ஐயா. தனது கண்டுபிடிப்பிற்காக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களிடமிருந்து விருதுபெற்றுள்ள இயற்கை விவசாயி பெருமாள் ஐயா தனது புதுமையான தொழில்நுட்பத்தையும் வழிமுறைகளையும் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
விவசாயிங்க பெரும்பாலும் பாரம்பரிய ரகத்தைதான் பயிர்செய்யறாங்க, இவங்களுக்கு ஒற்றை நாற்று நடவு முறை ஒரு வரப்பிரசாதமாகும். ஆரம்பத்துல நானும் மற்ற விவசாயிங்க மாதிரி ஒரு ஏக்கருக்கு 60 கிலோ விதை நெல் பயன்படுத்தினேன், பெரும்பாலும் மழ வந்தா, முளைச்ச நாத்தெல்லாம் அழுகிப்போகும்.
ஒருமுறை பயிர்களுக்கு இடையில் இடைவெளி அதிகமா இருந்த நாத்தெல்லாம் திடமா வளர்ந்திருந்ததை தற்செயலா பாத்தேன். அதே மாதிரி நிறைய இடைவெளி விட்டு பயிர் செய்து பாக்கலாம்னு தோணுச்சு, பரிட்சார்த்தமா செய்துபார்க்க சிறிது நிலத்தை ஒதுக்கி அதுல வெவ்வேறு இடைவெளி விட்டு பயிர் செஞ்சு பார்த்தேன்.
அதுல அதிக இடைவெளி விட்ட நாத்துங்க எல்லாம் நிறைய தூர்கள் வெடிச்சு, திடமா வளர்ந்திருந்ததை கவனிக்க முடிஞ்சது. இப்படி சின்னச் சின்ன ஆராய்ச்சிக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு அரை கிலோ விதைநெல் போதும்னு கண்டுபிடிச்சேன். 2004ம் வருஷத்திலேயே ஒரு ஏக்கருக்கு அரை கிலோ நெல் போதும்னு முடிவெடுத்தேன். பல வருஷமா படிப்படியா செஞ்ச ஆராய்ச்சிக்கு பிறகுதான் இது சரியா வந்துச்சு என்று ஒற்றை நடவுமுறையை தான் கண்டுபிடித்ததை பெருமிதமாகக் கூறினார் பெருமாள் ஐயா.
எத்தகைய ரகத்தை கையாண்டு, எவ்வாறு சாகுபடி செய்தேன் என்பதையும் நம்முடன் அவர் பகிர்ந்து கொள்கிறார்.
ADT 47 ரகம் ஒற்றை நெல் சாகுபடிக்கு ஏற்றதா இருந்ததால அதை வச்சே படிப்படியா ஆராய்ச்சி செஞ்சு கடைசியில் கால் கிலோ விதை நெல்லே போதும் என்ற முடிவுக்கு வந்தேன். தற்போது கால் கிலோ விதை நெல்லை வைத்தே ஒரு ஏக்கர் பயிர் செய்யறேன். சொல்லப் போனா 220 கிராம் விதை நெல்லே போதுமானதா இருக்கு.
எல்லா ரகத்திலும் முடியாது
ஆனால், ஒற்றை நாற்று நடவு முறைக்கு கால் கிலோ விதை போதும்ன்னு நெனைச்சுக்கிட்டு எல்லா ரகத்துக்கும் இப்படி செய்ய முடியாது. நெல் ரகம், பயிரோட வயசு, விதையோட தரம், மண்ணோட தன்மை, பட்டம், நாத்துக்கு நாத்து இடைவெளி, எத்தனைத் தூர் வெடிக்கும், இதையெல்லாம் கவனிச்சு தான் ஒற்றை நாற்று நடவு செய்யலாமா வேண்டாமான்னு முடிவு செய்யனும்.
வயல்ல இருந்தே ஒரே ஒரு தரமான கதிரை தேர்ந்தெடுத்தேன். அந்த கதுருல 300 நெல் மணிகள் வரைக்கும் இருக்கும். **விதை நேர்த்தி செஞ்ச பின்னாடி 200 விதை நெல்லாவது கிடைக்கும். இந்த சுத்தமான விதை நெல்ல நாத்துவிட்டு அந்த நாத்துக்கள 50க்கு 50 செமீ என்ற இடைவெளியில் நட்டேன். இந்த பயிருல இருந்து பத்து கிலோ வரைக்கும் சுத்தமான விதைநெல் கிடைச்சுது. இந்த பத்து கிலோ விதை நெல்லை பயன்படுத்தி இருபது ஏக்கர் பயிர் செய்ய முடியும்.** நாற்றங்கால்ல நீர் பாய்ச்சி களையை எல்லாம் முளைக்க விட்டுட்டு ஒரு வாரம் கழித்து உழுதுட்டோம்னா நாற்றங்கால் கலப்பு இல்லாம சுத்தமா இருக்கும்.
விதையை விளைவித்த கதை
நல்ல தரமான 300 கதிர்களை தேர்ந்தெடுத்து அதுக்கு அடையாளம் வச்சிட்டேன். அது முத்துனதுக்குப் பிறகு பறிச்சு கைகளாலேயே கசக்கி நெல்லை எடுத்தேன். கைகளாலேயே கசக்கி எடுத்தா நெல்லில் எந்த சேதமும் ஏற்படாது. இந்த விதை நெல்லில் இருந்து அரை கிலோ விதையை எடுத்து பயிர்செஞ்சேன் என விதைநெல்லை விளைவித்த கதையை விவரிக்கிறார் பெருமாள் ஐயா.
எவ்வளவு விதை நெல் தேவை என்பதில் சன்ன ரக நெல்லுக்கும், மோட்டா ரக நெல்லுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருக்கும் எனக்கூறும் அவர்,. ADT 43, ADT 47, சீரக சம்பா, பொன்னி போன்ற ரகங்கள் சன்ன ரகமாகும் என்றும், இந்த ரகங்கள்ல 250 கிராம் எடைக்கு கிட்டத்தட்ட 20,000 நெல்மணிகள் இருக்கும் என்றும் கூறுகிறார். சன்னரகத்துக்கு கால்கிலோ விதை நெல்லே போதுமானது. ஆனா CR 1009, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி போன்ற மோட்டா ரகங்கள்ல 250 கிராம் எடைக்கு 12,000 நெல்மணிகள் இருக்கும் என்பதால் மோட்டா ரகத்துக்கு கால் கிலோவுக்கு மேல விதை நெல் தேவைப்படும் என்று விதைநெல் பயிரிடச்செய்வதன் சூட்சுமத்தை விளக்குகிறார்.

அப்படி, அறுவடை செஞ்ச விதை நெல்லுல ஈரப்பதம் இருக்கும், அதை இளம் வெய்யில்ல காயப்போடனும். காலையில 9 மணியில் இருந்து 11மணி வரைக்கும் காயவைக்கலாம். 11 மணிக்குமேல் காய வைக்க வேண்டாம். உச்சி வெய்யில்ல நெல்ல காயவச்சா விதைகளில் முளைப்புத் திறன் குறைஞ்சுடும். இப்படி இரண்டு அல்லது மூன்று நாள் காயவச்சா நெல்லோட ஈரப்பதம் 12 சதவீதத்துக்கு வந்துடும். 12 சதவீதத்துக்கு மேல ஈரப்பதம் இருந்ததுன்னா பூச்சிங்க வரும். ஒரு துணிப்பையை சாணியில் நனைத்து நல்லா காஞ்ச பிறகு அந்த பையில விதை நெல்லை போட்டு கட்டி வைச்சுக்கணும் என்று விதைநெல்லை பதப்படுத்தும் பக்குவம் குறித்தும் எடுத்துரைக்கிறார்.
*“வித ஒன்னு போட்டா பொறவு சுர ஒன்னா முளைக்குமான்னு சொல்லி என்ற அப்பாரு அடிக்கடி பேசும்போது சொல்லுவாப்டிங்க! அதுமாரி விதைய சரியா தேர்ந்தெடுக்குறது ரொம்ப அவசியம்* எனக்கூறும் பெருமாள் ஐயா, அதனை எந்த முறையில் பயிரிடுவது என்றும் கூறுகிறார்.
விதைநெல்லை நாற்றங்காலில் பரவலா தூவணும். நெருக்கமா போடக்கூடாது! இடைவெளி நல்லா இருக்கும் போது நாத்து திடமாவும் வாளிப்பாவும் இருக்கும். 15 நாளுக்குள்ள 4, 5 தூர் வெடிச்சிரும். விதையை பரவலா போடும்போது நாத்து பறிக்கவும் எளிதா இருக்கும். 14-17 நாள் வயசுள்ள நாத்துங்க பிடுங்கி நட ஏத்தது, அதுக்கு மேல போகக்கூடாது, நாள் அதிகமாக அதிகமாக தூர் வெடிக்கிறது குறைஞ்சுரும். 30, 40 நாளுன்னு தள்ளி போடக்கூடாது, ஒத்த நாத்து நடவுக்கு இது சரிவராது என்கிறார்.
தண்ணி வசதி உள்ளவங்க மட்டும் நெல் சாகுபடி செய்யுங்க. பொதுவா பயிருக்கு தண்ணிய காய்ச்சலும் பாய்ச்சலுமா விடணும்னு சொல்லுவாங்க. ஆனா எப்போ பாய்ச்சல்? எப்போ காய்ச்சல்? என்று சரியா தெரிஞ்சு வச்சிருக்கணும். தூர்கட்டும் போதும், பால் பிடிக்கும் போதும் கட்டாயம் தண்ணி நிக்கணும். இந்த நேரத்தில் காயப்போட்டால் மகசூல் வராது. முக்கியமா நிலம் மேடுபள்ளம் இல்லாம சமமா இருக்கணும். நல்ல திறமையான ஆளுங்களை வச்சு நிலத்தை சமப்படுத்தி வச்சுக்கணும். மேடு பள்ளமான வயல்ல தண்ணீ பாய 3 மணிநேரமானா, சமமான நிலத்தில் 1 மணி நேரத்திலேயே பாய்ஞ்சுடும்.
நாற்று நட்டு முதல் 20 நாள் வயல்ல தரை தெரியாத அளவுக்கு தண்ணிய நல்லா நிறுத்துனா களைகள் முளைக்காது. நிலத்தை சமமா சீர்படுத்தி, தண்ணீரை குறைவாக நிறுத்தினாலே களைகள் கட்டுப்படும். அசோலாவை படர விட்டாலும் களைகள் குறையும். இடைவெளி அதிகமா இருக்கிறதால கோனா களை கருவி பயன்படுத்தி களையெடுக்க முடியும். கோனா வீடர் ஓட்டுறதால வேர்கள் நல்லா கிளம்பும்.

ஏக்கருக்கு 4000 கிலோ
இந்த முறையில் பயிர் செய்யும்போது ஒரு குத்துல 120 கதிர்வரைக்கும் வரும். ஒரு கதிர்ல 400 நெல்மணிங்க கிடைக்கும், தோராயமா ஒரு குத்துக்கு கால் கிலோ நெல் இருக்கும். ஒரு ஏக்கருக்கு 4000 கிலோ அறுவடை கிடைக்கும், மெஷின் அறுவடைன்னா 3,800 கிலோ கிடைக்கும் என்கிறார்.
ஒத்தை நாற்று நடவு முறை உங்க வயலுக்கும், மண்ணுக்கும் பொருத்தமா இருந்தா அத செய்யறது லாபமானது. விதை நெல்லு செலவு குறையும்; நடவு செலவு குறையும்; இடைவெளி அதிகமா இருக்கிறதால கோனா வீடர் ஓட்ட முடியும்; எலி வெட்டு குறையும்; பயிறுக்கு காற்றோட்டம்; சூரிய ஒளி நல்லா கிடைக்கறதால பூச்சி தாக்குதல் குறையும் மகசூல் நல்லபடி கிடைக்கும்; இப்படி பல நன்மைகள் இருக்கு என அதன் பலன்களை விவரிக்கிறார் பெருமாள் ஐயா.
வேளாண் அதிகாரிங்க என்னோட வயலுக்கு வந்து இதையெல்லாம் பாத்திருக்காங்க. 2004ல் நம்மாழ்வார் ஐயா என் தோட்டத்துக்கு வந்து, ஒற்றை நாற்று நடவு முறையில் நான் பயிர் செய்யறத பார்த்து என்ன பாராட்டி விருது எல்லாம் கொடுத்துருக்காரு எனக்கூறும் அவரது முகத்தில் பெருமிதம் தெரிகிறது.
கட்டுரைத் தொகுப்பு – உஷா பாரதி
இயற்கை விவசாயத்துடன் இவர் இணைந்த கதையை அவர் மொழியில் கேட்க….
ஈஷா விவசாய இயக்கம்
இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தை பெருக்குவதோடு, நஞ்சில்லாத உணவு உற்பத்தியின் மூலம் மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிபடுத்தி தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ஈஷா விவசாய இயக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
[சிறப்புக் கட்டுரை: பாறை நிலத்தைப் பசுமையாக மாற்றிய தேவியின் கதை!](https://minnambalam.com/public/2020/10/07/8/isha-agro-movement-story-about-farmer-devi)
