தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பருத்திக்கு சரியான விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்துக்குட்பட்ட திருப்பனந்தாளில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செயல்பட்டு வருகிறது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோட்டில் உள்ள பஞ்சு மில் தனியார் வியாபாரிகள் வந்து மறைமுக விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வது வழக்கம். தற்போது டெல்டா மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சாகுபடி செய்யப்பட்ட பருத்தியை திருப்பனந்தாள் அருகே கட்டா நகரம் பருத்தி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்ய விவசாயிகள் காத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 500 குவிண்டால் பருத்தியை கொண்டு வந்தனர். இதில் பல விவசாயிகளின் பருத்திக்கு சரியான விலை நிர்ணயம் செய்யவில்லை என்று புகார் தெரிவித்தனர். பின்னர் பருத்திக்கு சரியான விலை நிர்ணயம் செய்யக்கோரி விவசாயிகள் ஆடுதுறை திருப்பனந்தாள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
**-ராஜ்**