சிறப்புக் கட்டுரை: சாவறதுக்குள்ள எல்லாரும் ஒரு மரமாவது நடணும்!

Published On:

| By Balaji

கலைவாணியின் கதை

நான் கத்துகிட்ட நல்ல விஷயத்தை நாலு பேருக்கு சொல்லணும். கூட்டா சேர்ந்து சாதிக்கணும். இயற்கைக்கு மாறினா அதுவே நம்மை காப்பாத்தும். நம்ம மண்ணையும், சந்ததியையும் வாழவைக்கும். சாவறதுக்குள்ள எல்லாரும் ஒரு மரமாவது நடணும்ங்க. அப்பத்தான் இயற்கைன்னா என்ன… மரத்தோட, விவசாயத்தோட அருமை என்னன்னு எல்லாத்துக்கும் புரியும் எனக்கூறும் கலைவாணி, கோபிச்செட்டிபாளையத்தின், கள்ளிப்பட்டியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.

அவர் இயற்கை விவசாயத்திற்கு மாறிய கதை, இதோ அவரது வார்த்தைகளில்:

எங்களுக்கு 13 ஏக்கரு பூமி இருக்குதுங்க. இப்ப 10 வருஷமா ஈஷா விவசாய இயக்கத்தோட வழிகாட்டுதல்ல இயற்கை விவசாயம்தான் செய்யறோம். முதல்ல 5 வருஷம் கடுமையான உழைப்பு. மண்ணை சரிபடுத்தவே ரொம்ப காலம் பிடிச்சுடுச்சு. உப்புபோட்டு பாளமா இருந்த மண்ணு… அதுக்கே பழகிட்ட நாம…எப்படி சரி செய்யப் போறோம்? இது சரி வருமான்னு? அச்சம்தாங்க.

இருந்தாலும் ஈஷா விவசாய இயக்கம் கொடுத்த ஊக்கத்துல துணிஞ்சு இறங்கிட்டோம். மெள்ள, மெள்ள, மண்ணுக்கேத்த இயற்கை உரம் பயன்படுத்தினோம். பூச்சி விரட்டி தெளித்தோம். சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம், இயற்கை விதையூக்கி, விதை நேர்த்தின்னு பலதையும் முயற்சி பண்ணோம்.

உண்மையைச் சொல்லணும்னா, ரசாயனம் மருந்தடிச்சு, உரம்போட்டு என்ன உற்பத்தி பண்ணினோமோ அதே அளவு உற்பத்திதான் இப்பவும் கிடைக்குது. ஆனால், செயற்கை, ரசாயன உரத்துல, பூச்சி மருந்துக்கு செலவு பண்றதுல பாதிகூட செலவாகறது இல்ல. முதல் வருஷமே அப்படித்தான், இப்ப இந்த 10 வருஷத்துல செலவே நான் செய்யறதில்ல என்று சொல்லும் கலைவாணியை சற்றே சந்தேகத்துடன் பார்க்க, அதை புரிந்துகொண்ட அவர், நிசமாத்தாங்க எனத் தொடர்கிறார்.

முதல் 5 வருஷம் நிறைய இயற்கை உரம். ஜீவாம்ருத கரைசல் என பலதும் தொடர்ச்சியா பண்ணினதன் விளைவு, இன்னிக்கு மண்ணு பொலபொலன்னு புதுசா சமைஞ்ச பொண்ணுமாதிரி இருக்குங்க. இப்பல்லாம் மண்ணுக்கு மல்ஜிங் மட்டும்தான் என்கிறார் கலைவாணி.

அதென்ன மல்ஜிங் என்ற நம் கேள்விக்கு, அதாங்க மூடாக்கு போடறது. மரத்துலேர்ந்து விழும் இலை, தழை எல்லாத்தையும் போட்டு மரத்தோட, பயிரோட வேர்களை மூடிடுவோம். கூடுமான வரைக்கும் வெயிலோட தாக்கம் பயிருக்கு வராம பார்த்துப்போம். சில நேரம் தட்டப்பயிறு, தக்கைப்பூண்டு இதையெல்லாம் ஊடுபயிராக்கி பயிர் சேதமாகாம பார்த்துப்போம் என்கிறார்.

எனது 13 ஏக்கர் நிலத்தில், 5 ஏக்கர் முருங்கை சாகுபடி பண்றேன். 6 ஏக்கர் தென்னை,பாக்கு வச்சிருக்கேன். 1 ஏக்கருக்கும் குறைவா பழத்தோட்டம் வச்சிருக்கேன். ஒன்றரை ஏக்கர்ல டிம்பர் மரம் வச்சிருக்கேன் எனக்கூறும் அவர் முன்பெல்லாம் 1 ஏக்கருக்கு ஒண்ணேகால் லட்சம் கிடைக்கும். ஆனால், அதுல 70,000 வரை முட்டுவளிச் செலவு செஞ்சிடுவோம். ஆனால், இப்பல்லாம் 20,000 கூட செலவு பிடிக்கறதில்ல என்று தங்களது லாபம் பலமடங்கு உயர்ந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

நிறைய மாற்றுப்பயிர், ஊடுபயிர் சாகுபடி செய்றதால வருஷம் பூரா லாபம் பார்க்க முடியுது என்று கூறும் கலைவாணி, சமீபத்தில எங்க தோட்டத்தைப் பார்க்க பின்லாந்து அப்புறம் இரண்டு, மூணு வெளிநாட்லேர்ந்து எல்லாம் ஜனங்க வந்தாங்க. எங்க ஊரே எங்களை உசத்தியா பார்த்துச்சுங்க. கலைவாணிய வெளிநாட்டுகாரங்க எல்லாம் பார்க்க வராங்கடின்னு சொல்லும்போது உண்மையிலேயே பெருமையா இருந்துச்சுங்க என்கிறார்.

மரம்சார் விவசாயம்தாங்க. ஆரம்பத்துல இயற்கை விவசாயத்துல உடலுழைப்பு அதிகம் இருக்கும். லாபம் பெரிசா இல்லைன்னாலும், நஷ்டம் வராது. ஆனால், இரண்டு, மூணு வருஷத்துல லாபம் பல மடங்கு அதிகமாயிடும் எனக்கூறும் கலைவாணி, இயற்கை விவசாயத்தில் உற்பத்தியாகும் பயிர்கள் அடர்த்தியாக இருக்கிறது என்றும், நல்ல சாப்பாடு சாப்பிடறோம். நஞ்சில்லாத சாப்பாடு சாப்பிடறோம். நிறைய பேருக்கு நஞ்சில்லாத உணவு தர்றோங்கற நிம்மதி இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்த விவசாயம் பத்தி நிறைய பெண்களுக்கு எடுத்துட்டு போகணுங்க. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கூட்டா விவசாயம் செய்யணும். ஒண்ணுகூடி அவங்க நிலத்துல நாங்க, எங்க நிலத்துல அவங்கன்னு உழைச்சா, உடலுழைப்பையும் அலுப்பில்லாம பகிர்ந்து செஞ்சு லாபம் பார்க்கலாம் என்கிறார். பெண்களுக்கான கூட்டுப்பண்ணைதான் தனது கனவு என்றும் கூறுகிறார்.

என்னைக்கேட்டா, நகரத்துல இருக்கற மக்களும் மாடித்தோட்டம் வைக்கணும். ஒரு மரமாவது சாவறதுக்குள்ள எல்லாரும் நடணும். அதுக்கூட பேசிப்பாருங்க. அதை உங்க குழந்தை மாதிரி வளர்த்தீங்கன்னா, அதுல கிடைக்கற சந்தோஷமே தனி என்று அவர்கூறுகையில் அந்த மகிழ்ச்சி நமக்குள்ளும் ஒட்டிக் கொள்ளத்தான் செய்கிறது.

கட்டுரைத் தொகுப்பு – உஷா பாரதி

இயற்கை விவசாயத்துடன் இவர் இணைந்த கதையை அவர் மொழியில் கேட்க ….

ஈஷா விவசாய இயக்கம்

இயற்கை விவசாயத்தின் மூலம் விவசாயிகளின் பொருளாதாரத்தைப் பெருக்குவதோடு, நஞ்சில்லாத உணவு உற்பத்தியின் மூலம் மக்களின் ஆரோக்கிய வாழ்வை உறுதிபடுத்தி தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றுவதற்காக ஈஷா விவசாய இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

ஈஷா விவசாய இயக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் பெற 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share