விவசாயிகள் போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய தாக்குதலில், இளம் விவசாயி சுபாகரன் சிங் உயிரிழந்ததால், இரண்டு நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. Farmers protest two days hold in Delhi
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசுடன் நடத்திய நான்கு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்தநிலையில், விவசாயிகள் நேற்று பஞ்சாப், ஹரியா, உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி சென்ற போது, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறைக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மீது காவல்துறை தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டு வீசினர்.
குறிப்பாக பஞ்சாப் -ஹரியானா எல்லைப்பகுதியான கனாரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலில் 21 வயதான விவசாயி சுபாகரன் சிங்குக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவர் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சுபாகரன் சிங் உயிரிழந்தார்.
இதுகுறித்து விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் கூறும்போது,
“கனாரியில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் குறித்து விவாதிக்க உள்ளோம். டெல்லி நோக்கிய எங்களது பேரணி இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது.
எங்களது அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விவசாய அமைப்புகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில், மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறுத்து அவர் கூறும்போது, “இந்தியா முழுவதும் விவசாயிகள் உள்ளனர். ஒரு கொள்கையை உருவாக்கும் போது, நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் நலனையும் மனதில் கொள்ள வேண்டும். வரும் நாட்களில் விவசாயிகளின் கவலைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: உங்கள் முகத்துக்கேற்ற மூக்குத்தி எது?
வண்டலூர் பூங்காவில் உயிரிழந்த ஆண் புலி: காரணம் என்ன?
Farmers protest two days hold in Delhi