மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம்: முதல்வருக்கு அப்பாவு கடிதம்!

Published On:

| By indhu

நெல்லை மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை இயற்கை பேரிடராக அறிவித்து நிவாரணம் வழங்குமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சபாநாயகர் அப்பாவு இன்று (மே 27) கடிதம் எழுதியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கும்பிக்குளம், கோட்டை கருங்குளம், பெங்குடி ஆகிய கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது.

இதையடுத்து, சபாநாயகர் அப்பாவு நேற்று (மே 26) பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில், மழையால் பயிர்சேதம் ஏற்பட்டதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று இன்று (மே 27) முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “நெல்லை மாவட்டத்தில் பல பகுதிகளில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடையும் முடிந்துவிட்டது. சில பகுதிகளில் நீண்டகால பயிர்கள் விளைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில், தொடர் மழையின் காரணமாக நெல்மணிகள் தண்ணீரில் மூழ்கி, முழுவதுமாக முளைத்துவிட்டது. இதனால், நெற்பயிர்களும், வைக்கோலும்கூட பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, வேளாண் பயிர்கள் மழை நீரில் மூழ்கி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.

பணகுடிக்கு அருகிலுள்ள பெரிய புதுகுளம், புஞ்சை குட்டிகுளம் பாசனப் பகுதிகளில், விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்த, நெல்மணிகள் விளைந்து, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால், நெல்மணிகள் முளைத்து, முற்றிலும் சேதமடைந்துள்ளது.

அதேபோல், இராதாபுரம் தாலுகா, கும்பிகுளம், பெருங்குடி, திசையன்விளை தாலுகா, கோட்டை கருங்குளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக நெல்மணிகள் கடுமையாக சேதமடைந்துள்ளது. இதேபோல், நெல்லை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நெல்மணிகள் தண்ணிரில் மூழ்கி, சேதமடைந்துள்ளது.

ஆகவே, நெல்லை மாவட்ட நிர்வாகம், மாவட்டம் முழுவதும் ஏற்பட்டுள்ள நெல்மணிகளின் சேதத்தை ஆய்வு செய்து, இதனை பேரிடராக கருதி, அரசு உரிய அறிக்கை பெற்று, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உடனடியாக முழுமையான நிவாரணம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இன்னும் சில நாட்களில் காங்கிரஸ் ஆட்சி- திருநாவுக்கரசர் நம்பிக்கை!

மீண்டும் ஜெயலலிதாவை மேற்கோள் காட்டிய அண்ணாமலை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share