நான்குவழிச் சாலை: கூடுதல் இழப்பீடு கேட்டு விவசாயிகள் மறியல்!

Published On:

| By admin

சிவகங்கை மாவட்டத்தில் நான்குவழிச் சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் கூடுதல் இழப்பீடு கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் மதுரை – பரமக்குடி நான்குவழிச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து ராமநாதபுரம் வரை நான்குவழிச் சாலை அமைக்க திட்டமிட்டு முதற்கட்டமாக மதுரை – பரமக்குடி வரை நான்குவழிச் சாலை அமைக்க 2011-2012இல் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. இதற்காக திருப்புவனம், லாடனேந்தல், இந்திராநகர், திருப்பாச்சேத்தி மற்றும் பல கிராமங்களில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இந்த நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுவிட்டது.
இதற்கிடையில் நிலங்களின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதால் உயர்த்தப்பட்ட மதிப்புக்கு ஏற்ப கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் என நான்குவழிச் சாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள், கடந்த பல வருட காலமாக நான்குவழிச் சாலைக்கு நிலம் கொடுத்தோர் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
ஒவ்வொரு முறையும் போராட்டத்தின்போது உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் சமரசம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை கூடுதல் இழப்பீடு கிடைக்காததால் நேற்று திருப்பாச்சேத்தி டோல்கேட் முன்பு நிலம் கொடுத்தோர் கூட்டமைப்பு சார்பாக சாலை மறியல் செய்யப்படும் என அறிவித்திருந்தனர்.
இதையடுத்து மாவட்டக் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமாணிக்கம், திருப்புவனம் தாசில்தார் ரத்தினவேல் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் தர்மராஜ் ஆகியோர் தலைமையில் திருப்பாச்சேத்தி டோல்கேட் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
பின்னர் நான்குவழிச் சாலைக்கு நிலம் கொடுத்தோர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகப்பா தலைமையில் விவசாயிகள் கையில் கறுப்பு கொடியுடன் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வந்து சாலை மறியல் செய்தனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஏழு பெண்கள் உள்பட 38 விவசாயிகளை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் மதுரை – பரமக்குடி நான்குவழிச் சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி டோல்கேட் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share