திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நேற்று (ஜூலை 25) தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் மூன்று எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்றது திருப்பூர் மக்களை வியப்படையச் செய்துள்ளது. தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் தென்னை விவசாயம் அதிக அளவு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு தேங்காய், கொப்பரைக்கு உரிய விலை கிடைக்கவில்லை. அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் திறந்தும் உரிய பலன் கிடைக்காததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

இந்த நிலையில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியைத் தடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150 வழங்க வேண்டும். கள் விற்க அனுமதிக்க வேண்டும். சத்துணவு திட்டத்தில் தேங்காய் பால், தேங்காய் எண்ணெய் சேர்க்க வேண்டும். நியாய விலைக் கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். பாமாயில் இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் தேங்காய் உடைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.என்.விஜயகுமார் (திருப்பூர் வடக்கு), எம்.எஸ்.எம். ஆனந்தன் (பல்லடம்), கந்தசாமி (சூலூர்) உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றது திருப்பூர் மக்களை வியப்படையச் செய்துள்ளது. இது போன்ற நியாயமான கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் என்று கூறினர். இது தேங்காய் உற்பத்தியாளர்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.
ராஜ்
