தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையிலும் சூறாவளி காற்றிலும் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யாததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டு பயிர் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த ஆதனூர் கிராம பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
அந்த மழையால் விவசாய விளைநிலங்களுக்கு செல்லக்கூடிய மின்கம்பங்கள் உடைந்தும், சாய்ந்தும் பாதிப்புக்குள்ளானது.
இதனால் அந்தப் பகுதியில் மின் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நெற்பயிர்களுக்கு மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சக் கூடிய சூழ்நிலை ஏற்படவில்லை.
தற்போது ஏரி பாசன தண்ணீரைக் கொண்டு நெற்பயிர்களுக்கு தண்ணீர் இறைத்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள்,
“மின்கம்பங்கள் உடைந்தும் சாய்ந்தும் கிடப்பதால் மின் சப்ளை நிறுத்தி 10 நாட்களுக்கு மேலாகிவிட்டது.
உடைந்த மின்கம்பங்களை மாற்றி அமைக்க சில மின்கம்பங்களை ஊருக்குள் மின்வாரியத்தினார் கொண்டுவந்து போட்டு விட்டனர்.
ஆனால், விவசாய இடத்துக்கு விவசாயிகளே அந்த மின்கம்பத்தை கொண்டு செல்ல வேண்டும். அதற்கான பணத்தை நீங்களே தர வேண்டும் என விவசாயிகளிடம் கேட்கின்றனர்.
எங்களிடம் ஆட்களும் இல்லை. அதற்குண்டான பண வசதியும் இல்லை. இது சம்பந்தமாக மின்வாரிய உயரதிகாரிகள் உடனடியாக மின் சப்ளை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பழையனூரில் சூறாவளிக் காற்றில் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்காமல், அவற்றுக்கு மின்வாரிய ஊழியர்கள் கம்பால் முட்டு கொடுத்துவிட்டு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ஒரு மாதமாக மின்சாரமின்றி விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டன. ”பம்புசெட் மோட்டார்கள் மூலம் கோடை விவசாயம் செய்துள்ளோம். கம்பங்கள் சாய்ந்ததால் மின்விநியோகமின்றி மோட்டார்களை இயக்க முடியவில்லை.
இதனால் பயிர்கள் காய்ந்து வருகின்றன. தொடர்ந்து ஒரு மாதமாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை” என்று அங்குள்ள விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராஜ்
