விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற 22 வயது இளைஞரின் மரணம் குறித்து நீதி விசாரணை கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் இன்று (பிப்ரவரி 22) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Farmer killed Case in High Court
வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே மத்திய அரசுடன் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று டெல்லி நோக்கி சென்றனர். அப்போது பஞ்சாப் – ஹரியானா எல்லைப் பகுதியான கனாரியில் குவிக்கப்பட்டிருந்த காவல்துறைக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவைச் சேர்ந்த 22 வயதான இளம் விவசாயி சுப் கரண் சிங் உயிரிழந்தார். மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில், துப்பாக்கி குண்டு பாய்ந்த 3 பேர் சிகிச்சைக்காக பட்டியாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து டெல்லி செல்லும் போராட்டத்தை 2 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
சுப் கரண் சிங் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கண்டனங்களையும் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த நிலையில் சுப்கரண் சிங் உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை கோரி வழக்கறிஞர் ஹரிந்தர் பால் சிங் என்பவர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ”டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள், பெல்லட் துப்பாக்கிகள் கொண்டு போலீஸ், துணை ராணுவப் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அரியானா போலீசார் மற்றும் துணை ராணுவப் படைகள் பஞ்சாபின் அதிகார எல்லைக்குள் நுழைந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துள்ளன.
தங்கள் சொந்த நாட்டு விவசாயிகள் மீது போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் மேற்கொண்டுவரும் துப்பாக்கிச்சூட்டில் 22 வயதான இளம் விவசாயி சுப் கரண் சிங் உயிரிழந்துள்ளார். இது கண்மூடித்தனமான மற்றும் மனிதாபிமானமற்ற வரம்பு மீறிய தாக்குதல்.
மத்திய அரசின் அதிகார வரம்பு மீறல்கள் குறித்து பஞ்சாப் அரசு மற்றும் காவல்துறை மௌனமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பஞ்சாப் டிஜிபியோ அல்லது பஞ்சாப் தலைமைச் செயலாளரோ தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்களா என்பது குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை.
எனவே விவசாயிகள் மீது போலீஸ் மற்றும் துணை ராணுவப்படை பயன்படுத்தி வரும் ஆயுதங்களின் முழுமையான தரவுகளை பதிவு செய்ய மத்திய அரசுக்கும், மாநிலத்துக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த இளைஞரின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம், விசாரணைக்காக வரும் பிப்ரவரி 29 அன்று பட்டியலிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சர்ச்சைப் பேச்சு : அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு த்ரிஷா வக்கீல் நோட்டீஸ்!
”மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம்”: எடப்பாடி காட்டம்!