“எம்மக்கள் தங்களுக்கான தலைவனை திரையில் தேடுவதில்லை தரையில் தேடுவார்கள்” என்று மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி கூறியது சமூக வலைதளங்களில் வைரலான அதே வேளையில் தமிழகத்தில் சினிமா நடிகரான ரஜினிகாந்தை தங்களை ஆளக்கூடிய தலைவராக வர வேண்டும் என அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
அதோடு அவரை தமிழ்நாடு முதல்வராகவே சித்தரித்து ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டினார்கள். ஆனால் உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என்று உலகத்தில் உள்ள எல்லா தெய்வங்கள் சாட்சியாக ரஜினிகாந்த் பகிரங்கமாக அறிவித்தார். அதன் பின் அவரது ரசிகர்கள் மெளனமாகி போனார்கள்.
இந்த நிலையில் நடிகர் விஜய் நேரடியாக முதல்வராகும் நோக்கத்தில் பாராளுமன்ற தேர்தலை புறக்கணித்து 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக தமிழக வெற்றி கழகம் என கட்சிப் பெயரை அறிவித்து விட்டார்.
இந்த அறிவிப்பு வெளியான பின்பு மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்பதற்கு ஏற்ப ரஜினிகாந்த் ரசிகர்கள் மீண்டும் அரசியல் ஆசையோடு நடக்க தொடங்கியுள்ளனர்.
ரஜினிகாந்த் கெளரவ வேடத்தில் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் நேற்றைய தினம் உலகம் முழுவதும் வெளியானது. சூப்பர் ஸ்டார் என்பதை கடந்து அரசியல் கட்சி தலைவருக்கு இணையாக கட் அவுட், பேனர், போஸ்டர் என படம் வெளியான திரையரங்குகளில் ரசிகர்கள் அமர்களப்படுத்தி கொண்டாடியுள்ளனர்.
இதில் திருச்சி நகர ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்கள் ஆத்மார்த்த நடிகர் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற ஆர்வத்தை இன்னும் கைவிடவில்லை என்றே தெரிகிறது. திருச்சி ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட துணைச் செயலாளர் ராயல் ராஜு ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்காக வடிவமைத்திருக்கும் அந்த கொடி தான் நேற்று ரஜினிகாந்த் ரசிகர்களிடம் பரபரப்பு விஷயமாக வைரலானது.
ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவின் உருவம் பொறிக்கப்பட்ட அந்த கொடியில், “சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டும்” என்கிற வாசகம் இடம் பெற்றிருந்தது. ‘லால் சலாம்’ வெளியான தியேட்டர் முன்பாக அந்த கொடியை ஏந்தி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் பலரும் வலம் வந்தனர். சிவப்பு, மஞ்சள், பச்சை என பல வண்ணங்களுடன் அந்த கொடி இருந்ததால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கட்சி தொடங்க முன்னோட்டமோ? என்று பரபரப்பு பற்றிக் கொண்டது.
அந்த கொடியை வடிவமைத்த ராயல் ராஜு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர், “எங்கள் தலைவரின் மகள் இயக்கிய படம் என்பதால், வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காக இந்த கொடியை வடிவமைத்தேன். இந்தப் படத்தில் புரட்சிகரமான கருத்தை ஐஸ்வர்யா எடுக்க முன் வந்ததால் சிவப்பு நிறத்தை கொடியில் சேர்த்தேன். அதேபோல தலைவர் சொல்லை நிறைவேற்ற எப்போதும் தயார் நிலையில் இருப்பதால் மஞ்சள் நிறத்தையும், ஐஸ்வர்யாவை வாழ்த்தும் விதமாக வெற்றி குறியீடாக பச்சை வண்ணத்தையும் கொடியில் சேர்த்து இருக்கிறோம்.
எல்லா புரட்சிகளுமே விரும்புவது அமைதியையும், சமாதானத்தையும் தான். அதனாலே தான் கொடியில் “சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்” என்ற வாசகத்தை பொறித்தோம். தலைவர் படத்தை கொண்டாடி, இந்த படத்தை இயக்கிய அவரது மகளுக்கு சிறப்பு செய்யத்தான் இந்த கொடியை வடிவமைத்தோம். இதன் பின்னணியில் எந்த அரசியல் முயற்சியோ அரசியல் நோக்கமோ இல்லை” என்று விளக்கமளித்திருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இராமானுஜம்
கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ் செல்லும் : நீதிமன்ற உத்தரவுக்கு வரவேற்பு!
சொல்பேச்சு கேட்காத இளம்வீரர்… இழுத்து மூடப்பட்ட கதவுகள்… என்ன தான்பா பிரச்சினை?