ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு உரிய மதிப்பளிக்க தவறுவதாக கூறி இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரை பதவி நீக்க செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது. இத்தொடர் வரும் அக்டோபர் 19 முதல் நவம்பர் 8 வரை நடைபெறவிருக்கும் நிலையில், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான 15 பேர் கொண்ட ஒருநாள், டி20 இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்திய ஒருநாள் அணி வீரர்கள் விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
இந்திய டி20 அணி வீரர்கள் விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, சிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.
இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சுப்மன் கில் கேப்டனாகவும், ஸ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கேப்டன்சியிலிருந்து ரோகித்தை நீக்கியது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதை விட ரோகித் சர்மா பதவி பறிப்பு, ரோகித் – விராட் கோலி ஆகியோரின் எதிர்காலம் குறித்து அஜித் அகர்கர் செய்தியாளர் சந்திப்பில் பேசியது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடலாம்!
அவர் கூறுகையில், “ஒருநாள் உலகக்கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளது. ஆனால் அதற்குள் எத்தனை ஒருநாள் போட்டிகள் இருக்கிறது எனப் பார்த்தால், அது குறைவு தான். இந்திய அணி கடைசியாக ஒரு நாள் போட்டியில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த மார்ச் மாதம் விளையாடியது. எங்களது கவனம் முழுவதும் அடுத்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் உள்ளது.
மூன்று வடிவங்களுக்கும் மூன்று வெவ்வேறு கேப்டன்களைக் கொண்டிருப்பது மிகவும் கடினம். தேர்வாளர்கள் மட்டுமல்ல, மிக முக்கியமாக, பயிற்சியாளருக்கும் கூட, மூன்று வெவ்வேறு நபர்களுடன் திட்டமிடுவது ஒருபோதும் எளிதானது அல்ல” என்றார்.
தொடர்ந்து ரோகித், கோலி குறித்து பேசுகையில், “அவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் ரன்களை குவித்து வருகின்றனர். இன்னும் இந்திய அணிக்குள் அவர்களே தலைவர்களாக உள்ளனர். தற்போது தேர்வுசெய்யப்பட்டிருக்கும் அணி ஆஸ்திரேலியாவுக்காக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளது, இதில் நீங்கள் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்” என்று அகர்கர் தெரிவித்தார்.
அகர்கரின் இந்த பேச்சு ரோகித் கோலி ரசிகர்களிடையே எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் அவரை தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
திடீர் அவமதிப்புகள் ஏற்கத்தக்கவை அல்ல!
அதன்படி ஒரு ரசிகர் வெளியிட்ட பதிவில், “டியர் பிசிசிஐ,ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கி வைத்த அஜித் அகர்கரின் முடிவு – ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த ஜாம்பவான்கள் வெறும் வீரர்கள் மட்டுமல்ல – அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் தூண்கள், அவர்கள் மரியாதைக்கு தகுதியானவர்கள். இந்த திடீர் அவமதிப்புகள் ஏற்கத்தக்கவை அல்ல.
ரசிகர்களாகிய நாங்கள், அஜித் அகர்கரை தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து நீக்குமாறு உங்களை வலியுறுத்துகிறோம்” என அதில் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற இருவரின் ரசிகர்களும் அகர்கருக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
