ஓய்வை அறிவித்த ஷிகர் தவான் : காரணம் என்ன?

Published On:

| By Kumaresan M

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷிகர் தவான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வீரராக ஷிகர் தவான் வலம் வந்த போது, கடந்த 2012ஆம் ஆண்டு ஆயிஷா முகர்ஜியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

ஆயிஷா முகர்ஜியின் தந்தை பெங்காலி, தாய் பிரிட்டனை சேர்ந்தவர். ஆஸ்திரேலியாவில் வளர்ந்த ஆயிஷா முகர்ஜிக்கு குத்துச்சண்டை மீது அதிக ஆர்வம். இதனால் பிரபல குத்துச்சண்டை வீராங்கனையாக வலம் வந்தார்.

பின்னர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரை மணந்த ஆயிஷா முகர்ஜி, அவருடன் இரு குழந்தைகளை பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆயிஷா முகர்ஜி விவாகரத்து செய்தார்.

இதையடுத்து, ஷிகர் தவானை காதலித்து 2012ஆம் ஆண்டு திருமணம்  செய்து கொண்டார்.ஆயிஷா ஷிகர் தவானை விட 10 வயது மூத்தவர். எனினும், எப்படி ஷிகர் தவான் அவரை காதலித்தார் என்று தெரியவில்லை.

இந்த தம்பதிக்கு 2015ஆம் ஆண்டு மகன் பிறந்தான்.  ஷிகர் தவான் முன்னணி வீரராக இருந்ததால், ஆயிஷா முகர்ஜியின் புகழும் உச்சம் சென்றது. இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே இருந்தது. ஆனால் திடீரென ஷிகர் தவான் – ஆயிஷா முகர்ஜி இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விவாகரத்து பெற்றனர்.

இதை தொடர்ந்து, மகனை ஆயிஷா முகர்ஜி ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து சென்றார். மகனை பார்க்கவோ, பேசவோ கூட ஆயிஷா முகர்ஜி அனுமதிக்கவில்லை. நீதிமன்றம் வரை சென்று தான் ஷிகர் தவான் தனது மகனை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வியும் சர்ச்சைகளும் ஷிகர் தவானை மனரீதியான உருக்குலைத்ததாகவே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். இதுவே, அவரின் கிரிக்கெட் வாழ்க்கையையும் முடிவு கொண்டு வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஷிகர் தவான் ஓய்வு பெறுவதாக இன்று (ஆகஸ்ட் 24) அறிவித்துள்ளார்.

அந்த காணொலியில் “ நான் எனது வாழ்க்கையின் முக்கியமான ஒரு தருணத்தில் இப்போது இருக்கிறேன். இந்த தருணத்தில், எனது கடந்த காலத்தை நினைத்துப் பார்த்தால், பல்வேறு நினைவுகள் கண்முன்னே வருகின்றன, வருங்காலத்தை நினைத்துப் பார்த்தால் ஒரு உலகமே என் கண் முன்னே விரிகிறது.

சிறுவயதில் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதே எனது மிகப் பெரிய கனவாக இருந்தது. அந்த கனவை நிஜமும் ஆக்கினேன். அதற்கு எனது குடும்பம், பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இந்திய அணியில் விளையாடியதால் எனக்கு ஒரு புது குடும்பமும் உங்களின்(மக்களின்) அன்பும் கிடைத்தது.

எப்படி ஒரு கதை படிக்கும் போது பக்கங்களை திருப்பினால் தான் கதையில் முன்னேற முடியுமோ, அது போல நான் இப்போது எனது வாழ்க்கையின் பக்கங்களைத் திருப்ப முடிவெடுத்துள்ளேன். நான் சர்வதேச மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை இன்று அறிவிக்கிறேன்.

நான் எனக்கே சொல்லிக்கொள்வது இனிமேல் இந்தியாவுக்காக விளையாட முடியாது என்று கவலைப்படாதே மாறாக இந்தியாவுக்கு விளையாடியது நினைத்து சந்தோசப்படு என்பதுதான்” என்று பேசியுள்ளார்.

2010 முதல் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஷிகர் , 34 டெஸ்ட், 68 டி20 மற்றும் 167 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 10,867 ரன்கள் குவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன், அப்துல் ரகுமான்

விஜய் சேதுபதி படத்தில் நித்யா மேனன்

மீண்டும் மலை ஏறிய தங்கம் விலை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share