புத்தாண்டு இரவு என்றாலே சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் டிவியில் எதையாவது பார்த்துக்கொண்டு, சோபாவில் சாய்ந்துகிடப்பதுதான் நமக்கு வழக்கம். அல்லது, வீட்டுக்குள் இருந்தாலும் ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்து மொபைலில் எதையாவது நோண்டிக்கொண்டிருப்போம். ஒரே வீட்டில் இருந்தாலும், மனதளவில் நாம் வெகுதூரத்தில்தான் இருக்கிறோம்.
இந்த வருடம் அந்தத் திரைகளை (Screens) அணைத்துவிட்டு, மனிதர்களோடு விளையாடுவோம். ஒரு ‘கேம் நைட்’ (Game Night) ஏற்பாடு செய்தால், வீடு முழுக்கச் சிரிப்பு சத்தம் மட்டும்தான் கேட்கும்.
இதோ, குடும்பத்தோடு விளையாடச் சில சூப்பர் ஐடியாக்கள்:
1. அந்தாக்ஷரி (Antakshari): எத்தனை தலைமுறை மாறினாலும், இதன் மவுசு குறையவே குறையாது. தாத்தா பாட்டி முதல், எல்கேஜி படிக்கும் பேரன் பேத்தி வரை அனைவரும் கலந்து கொள்ளலாம்.
- ட்விஸ்ட்: வழக்கமான சினிமா பாட்டு மட்டுமல்லாமல், “பக்திப் பாடல்கள் ரவுண்ட்”, “எம்ஜிஆர் பாட்டு மட்டும்” எனச் சின்னச் சின்ன கண்டிஷன்களைப் போட்டால் ஆட்டம் இன்னும் சுவாரஸ்யமாகும்.
2. டம் ஷராட்ஸ் (Dumb Charades): நடிப்புத் திறமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பு. ஒரு படத்தின் பெயரைச் காதில் சொல்லிவிட்டு, அதைச் சைகையில் (Mime) நடித்துக் காட்ட வேண்டும். வாயைத் திறக்கவே கூடாது.
- “அவன் என்னடா குரங்கு மாதிரி ஆடுறான்?” என்று கிண்டல் செய்வதும், தப்புத் தப்பாகப் பதில் சொல்வதுமாக அந்த இடமே கலகலப்பாகும்.
3. போர்டு கேம்ஸ் (Board Games): பரமபதம், தாயம் (Ludo), பல்லாங்குழி போன்ற பாரம்பர்ய விளையாட்டுகளைத் தூசு தட்டுங்கள்.
- தண்டனை (Punishment): தோற்பவர்களுக்கு ஜாலியான தண்டனைகளை வழங்குங்கள். உதாரணத்திற்கு, “முகத்தில் பவுடர் பூசுவது”, “கசப்பான பாகற்காயைக் கடிப்பது” அல்லது “நாய் போலக் குரைப்பது”. இந்தத் தண்டனைகள்தான் விளையாட்டின் ஹைலைட்!
4. உண்மை அல்லது தைரியம் (Truth or Dare): வட்டமாக அமர்ந்து ஒரு பாட்டிலைச் சுழற்றுங்கள். பாட்டில் யார் பக்கம் நிற்கிறதோ, அவர்கள் ‘உண்மை’ சொல்ல வேண்டும் அல்லது ஒரு ‘தைரியமான’ செயலைச் செய்ய வேண்டும். மனதிற்குள் இருக்கும் ரகசியங்களை வெளிக் கொண்டு வர இது ஒரு நல்ல வாய்ப்பு.
ஏன் இது தேவை? நள்ளிரவு 12 மணி வரை விழித்திருக்க வேண்டும் என்பதற்காகச் சும்மா உட்கார்ந்திருந்தால் தூக்கம் தான் வரும். ஆனால், இப்படி விளையாடினால் நேரம் போவதே தெரியாது. எல்லாவற்றையும் விட, குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் இடைவெளி குறைந்து, நெருக்கம் அதிகரிக்கும்.
இந்த நியூ இயர், உங்கள் வீட்டைக் கொண்டாட்டக் களமாக மாற்றுங்கள். டிவியை ஆஃப் பண்ணுங்க… கேம்மை ஸ்டார்ட் பண்ணுங்க!
