வித்யா பாலன் முதல் முகேஷ் அம்பானி வரை… எடை குறைய இவங்க டிப்ஸ் தராங்களா? உஷார்! இது AI விரிக்கும் ‘டீப்ஃபேக்’ வலை!

Published On:

| By Santhosh Raj Saravanan

fake weight loss ads ai deepfake scams celebrity videos reality check tamil

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமைத் திறந்தாலே போதும்… “தினமும் காலையில் இதைக் குடித்தால் 10 கிலோ குறையும்”, “முகேஷ் அம்பானியின் எடை குறைப்பு ரகசியம் இதுதான்” என்று வீடியோக்கள் வரிசைகட்டி வருகின்றன. அதில் வரும் பிரபலங்கள் பேசுவதைப் பார்த்தால் அச்சு அசல் உண்மை போலவே இருக்கும். ஆனால், கொஞ்சம் உற்றுப் பார்த்தால் தெரியும், அது ஒரு ‘டீப்ஃபேக்’ (Deepfake) மோசடி என்று!

எது உண்மை? எது பொய்? சமீபகாலமாகச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பிரபலங்கள் பேசாத விஷயங்களைப் பேசியது போல வீடியோ உருவாக்கி மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.

ADVERTISEMENT
  • அம்பானி & கோலி: அனந்த் அம்பானி, விராட் கோலி போன்றவர்கள் ஒரு குறிப்பிட்ட மாத்திரையைச் சாப்பிட்டுத்தான் எடை குறைந்தார்கள் என்று போலியான வீடியோக்கள் உலா வருகின்றன.
  • பிங்க் சால்ட் ட்ரிக்: மருத்துவர் கோட் அணிந்த ஒருவர், “பிங்க் சால்ட் (Pink Salt) தண்ணீரில் கலந்து குடித்தால் தொப்பை கரையும்” என்று பேசுவது போலவும் வீடியோக்கள் பரவுகின்றன. உண்மையில், அந்த மருத்துவர்கள் அப்படிச் சொல்லவே இல்லை; அது AI-யால் உருவாக்கப்பட்ட குரல்.

சென்னையில் நடந்த சம்பவம்: இது ஏதோ வடநாட்டில் நடக்கும் கதை இல்லை. நம்ம ஊர் சென்னையிலேயே ஒரு விபரீதம் நடந்துள்ளது. திருவொற்றியூரைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் வந்த “மூலிகை பவுடர்” விளம்பரத்தை நம்பி ஆர்டர் செய்துள்ளார். பார்சலைத் திறந்து பார்த்தால், அதில் இருந்தது மூலிகை பவுடர் அல்ல… வெறும் அரிசி மாவு! பணம் போனதுதான் மிச்சம்.

ஏன் இந்தத் திடீர் மோகம்? உலகம் முழுவதும் இப்போது ‘ஓசெம்பிக்’ (Ozempic) போன்ற ஊசிகள் மற்றும் மாத்திரைகள் மூலம் எடை குறைப்பது ட்ரெண்டாகி வருகிறது. இதைப் பயன்படுத்திக்கொள்ளும் மோசடி கும்பல்கள், “உடல் எடையைக் குறைக்க இதுவே வழி” என்று போலியான மருந்துகளைத் தலையில் கட்டுகிறார்கள்.

ADVERTISEMENT

தப்பிப்பது எப்படி?

  1. உதட்டை கவனியுங்கள்: வீடியோவில் பேசுபவரின் உதடு அசைவும் (Lip Sync), வரும் குரலும் சரியாகப் பொருந்துகிறதா என்று பாருங்கள். AI வீடியோக்களில் பெரும்பாலும் இது இடிக்கும்.
  2. அதிகாரப்பூர்வ பக்கம்: ஒரு நடிகர் மருந்தை விளம்பரப்படுத்துகிறார் என்றால், அவருடைய சொந்தச் சமூக வலைதளப் பக்கத்தில் அது இருக்கிறதா என்று சோதியுங்கள்.
  3. அதிசயம் நடக்காது: “உடற்பயிற்சியே இல்லாமல் 7 நாளில் 10 கிலோ குறையும்” என்று சொன்னால், அது நிச்சயம் பொய்.

உடல் எடையைக் குறைக்கக் குறுக்குவழி கிடையாது. ஆன்லைன் மாயையில் சிக்கி ஆரோக்கியத்தையும், பணத்தையும் இழக்காதீர்கள்!

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share