அகமதாபாத்தில் காந்திக்கு பதிலாக நடிகர் அனுபம் கெர் படத்தை வைத்து கள்ள நோட்டு அடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தங்க வியாபாரியான மெகுல் தாக்கர் என்பவர் 1.6 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தனது ஊழியரான ஜோஷி என்பவரிடத்தில் கொடுத்து வாடிக்கையாளரிடத்தில் ஒப்படைக்க கூறியுள்ளார். ஜோஷியும் நவ்ரங்புரா என்ற இடத்திலுள்ள வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு சென்று தங்க நகைகளை ஒப்படைத்துள்ளார்.
அப்போது, அந்த வாடிக்கையாளர் பண்டல்களாக 500 ரூபாய் எடுத்து கொடுத்துள்ளார். நோட்டுக்களை ஜோஷி சோதித்து பார்த்த போது, அதில் காந்தி படத்துக்கு பதிலாக நடிகர் அனுபம் கெர் படம் இருந்தது. அதோடு, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக Resole Bank of India என்றும் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கிடையே, அந்த வாடிக்கையாளர் தங்க நகையுடன் ஓடியும் விட்டார். இதனால், ஏமாந்து போன ஜோஷி தனது உரிமையாளரிடத்தில் நடந்த விஷயங்களை கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், நவ்ரங்கபுரா காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் கள்ள நோட்டு அச்சடித்த இருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் செப்டம்பர் 24 ஆம் தேதி நடந்துள்ளது. கைப்பற்றப்பட்ட 1.6 கோடி மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகளில் அனுபம் கெர் அழகாக இடம் பெற்றிருந்தார்.
தற்போது, இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.இந்த வீடியோவை தன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அனுபம் கெர், நாட்டின் 500 ரூபாய் நோட்டில் எனது படமா? நாட்டில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்று காமெடியாக கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
திருப்பதி லட்டுவில் கலப்படம் – ஆதாரம் இருக்கிறதா?: சந்திரபாபுவுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!
தருமபுரி – காவிரி உபரி நீர் திட்டம்… பாமக கடையடைப்பு போராட்டம் அறிவிப்பு!