விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பெயரில் அவரது புகைப்படத்துடன் போலி முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பணம் கேட்கப்படுவதால் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஜெயசீலன் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது முகநூல் பக்கத்தை சுமார் ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கின்றனர்.
மாவட்டத்தில் நடைபெறும் அன்றாட அரசு நிகழ்வுகள், அறிவிப்புகள், புத்தகத் திருவிழா குறித்த பதிவுகள் என பல்வேறு தகவல்கள் மாவட்ட ஆட்சியரின் முகநூல் பக்கத்தில் தினந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆட்சியர் புகைப்படத்துன் கூடிய போலியான முகநூல் பக்கம் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பணம் கேட்கப் படுவதால் மாவட்ட ஆட்சியரின் முகநூலை பின் தொடரும் அரசு அதிகாரிகளும் பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘விருதுநகர் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி. கடந்த சில தினங்களாக மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை பயன்படுத்தி ஆட்சியர் பெயரில் போலியான முகநூல் பக்கம் உருவாக்கி, அதன் மூலம் பணம் கேட்பதாக எங்களது கவனத்திற்கு வந்துள்ளது.
இது முற்றிலும் இணையவழி திருடர்களின் வேலையாகும். ஏற்கெனவே இதுபோன்ற பல மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் பெயரில் போலியான முகநூல் பக்கத்தை உருவாக்கி அதன்மூலம் பலரிடமும் பணம் பெற்று ஏமாற்றியுள்ளனர்.
இதுபோன்ற போலியான முகநூல் பக்கத்திலிருந்து யாராவது பணம் கேட்டால் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.
மேலும், இணைய வழியாக யாரேனும் கடன் தருவதாகவோ, பரிசு விழுந்துள்ளதால் அதற்கு முன்பணம் கட்ட வேண்டும் என்றோ,
வெளிநாட்டிலிருந்து பரிசு வந்துள்ளது, அதை விமான நிலையத்தில் சுங்கக் கட்டணம் கட்டி வாங்கிக்கொள்ள பணம் அனுப்புமாறும் யாரேனும் தொலைபேசி வாயிலாகவோ அல்லது இணையம் வாயிலாகவோ தொடர்புகொண்டால் அதனை நம்ப வேண்டாம்.
இவை அனைத்தும் இணையவழி திருடர்களின் வேலையாகும்.
எனவே, விருதுநகர் மாவட்ட மக்கள் இதுபோன்ற போலியான முகநூல் அல்லது இணையவழி பணம் கேட்டால் யாரும் நம்பி பணம் அனுப்பி ஏமாற வேண்டாம் என்றும், மிகவும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தனது பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கியது குறித்து மெட்டா நிறுவனத்திடம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் புகார் அளித்துள்ளார்.
மேலும் விருதுநகர் சைபர் க்ரைம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : இஸ்ரேல் தாக்குதல் முதல் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடக்கம் வரை
கிச்சன் கீர்த்தனா : தினை அரிசி சர்க்கரை பொங்கல்
இது என்னடா காந்திக்கு வந்த சோதனை? – அப்டேட் குமாரு
மத்திய மாநில அரசுகளின் உறவை ஆளுநர் துண்டிக்கிறார் : அமைச்சர் ரகுபதி