தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ள தெலங்கானா,கேரளா, பஞ்சாப் மாநில முதல்வர்கள் சென்னைக்கு வருகைத் தந்துள்ளனர். Punjab Kerala Telangana Chief Ministers in Chennai
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் சென்னையில் நாளை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு சம்பந்தப்பட்ட மாநில முதல்வர் மற்றும் கட்சித் தலைவர்களை தமிழக குழு சந்தித்து அழைப்பு விடுத்தது.
இந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை இன்று (மார்ச் 21) காலை வெளியிட்டார். அதில், “மக்கள்தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுத்துவிட கூடாது! அதனால் தான், தமிழ்நாட்டில் இருக்கின்ற பெரும்பாலான கட்சிகளின் ஒருங்கிணைந்த சிந்தனைப்படி, மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்கின்ற இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது !
இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும்! அதன் அடிப்படையில் அடுத்தக்கட்டநடவடிக்கைகளை மேற்கொள்வோம்! ” என்று கூறியிருந்தார்.
இந்தசூழலில் பிற மாநிலங்களில் இருந்து முதல்வர்களும், கட்சி பிரதிநிதிகளும் சென்னை வந்துகொண்டிருக்கின்றனர்.
தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று இன்று காலை கேரள முதல்வர் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் வைத்து தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து இன்று மாலை பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சென்னை வந்தார். அவரை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் நேரில் சென்று வரவேற்றனர்.
அவரைத் தொடர்ந்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வருகைத் தந்தார். அவரை அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வரவேற்றனர். Punjab Kerala Telangana Chief Ministers in Chennai