பிளே ஆஃப் முன்னேற கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் மும்பை – டெல்லி ஆகிய இரு அணிகளும் நேற்று (மே 21) வான்கடேவில் மோதின. faf du plessis listout why dc not get into playoff
இதில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
குறிப்பாக சூர்யா மற்றும் நமன் தீரின் அதிரடி ஆட்டம் மற்றும் மும்பை அணி வீரர் சாண்ட்னர் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும், பும்ரா 3.2 ஓவர்களில் 12 ரன்களை கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்ததும் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

நம்பி கொடுக்கலாம்!
இதுகுறித்து போட்டிக்கு பிறகு பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நான் எப்போது வேண்டுமானாலும் அவர்களை நம்பி (சாண்ட்னர் மற்றும் பும்ரா) பந்தை கொடுக்க முடியும். அதன்பிறகு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இது எனது வேலையை மிகவும் எளிதாக்குகிறது” என பாராட்டினார்.

2 ஓவரில் உழைப்பு அனைத்தும் வீணாகிவிட்டது!
அதே போன்று டெல்லி அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பேசுகையில், ”இன்று நாங்கள் மைதானத்தில் சிறப்பாக விளையாடினோம். வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
பேட்டிங் செய்வதற்கு எளிதான மைதானம் இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அது பந்து வீச்சாளர்களின் வேலையை கொஞ்சம் எளிதாக்கியது. ஆட்டத்தின் 18வது ஓவர் வரை எங்களது கைகளே ஓங்கியிருந்தன. எனினும் கடைசி 2 ஓவர்களில் அதை விட்டுவிட்டோம்.
கிரிக்கெட்டில் மொமெண்டம் என்பது ஒரு உண்மையான விஷயம். கடைசி 2 ஓவர்களில் கிட்டத்தட்ட 50 ரன்கள் அவர்கள் எடுக்க, நாங்கள் 17-18 ஓவர்கள் வரை போட்ட கடின உழைப்பு அனைத்தும் வீண் ஆனது.
பேட்டிங் விஷயத்தில், உங்களுக்கு இது போன்ற ஒரு பிட்சில் ஒரு நல்ல தொடக்கம் தேவை. ஆனால் நாங்கள் பேட்டிங்கில் இன்று சரியாகச் செயல்படவில்லை. எங்கள் சீசனை சுருக்கமாகக் கூறினால், கடந்த 6 அல்லது 7 ஆட்டங்களில் நாங்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சில் மிகவும் சோர்வாக இருந்ததாக தோன்றுகிறது. அப்படி இருக்கும்போது பிளே ஆஃப் செல்வது என்பது கடினம் தான்.
குறிப்பாக அக்சர் அணி ஒரு தரமான பந்து வீச்சாளர், சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட இடது கை சுழற்பந்து வீச்சாளர். சாண்ட்னர் மற்றும் அக்சர் இருவரும் மிகவும் ஒத்த பந்து வீச்சாளர்கள். அக்சர் இந்த மைதானத்தில் பந்துவீசவே விரும்புவார். துரதிர்ஷ்டவசமாக, கடந்த இரண்டு நாட்களாக அவர் மிகவும் உடல்நிலை சரியில்லை. அதே போன்று ஸ்டார்க்கும் ஒரு அருமையான பந்து வீச்சாளர் தான். அவர் இல்லாததும் அணிக்கு பின்னடைவாகி விட்டது” என வேதனை தெரிவித்தார்.