நாடு முழுவதும் வரும் மே 3-ந் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படும் நீட் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான (NEET UG 2026) நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட்டுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நீட் தேர்வுக்கான (NEET UG 2026) நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்வதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து தேசிய தேர்வு முகமை முக்கிய விளக்கங்களை அளித்துள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்விற்கு மொத்தம் 22.79 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தங்களது நுழைவுச்சீட்டுகளை வெற்றிகரமாகப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தொழில்நுட்ப சிக்கல்களுக்கான தீர்வுகள்:
ஒரே நேரத்தில் பல லட்சம் மாணவர்கள் இணையதளத்தைப் பயன்படுத்துவதால் தற்காலிகத் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க மாணவர்கள் கீழ்க்கண்ட வழிகளை முயற்சி செய்யலாம்.
- உங்களது பிரவுசரின் (Browser) Cache மற்றும் Cookies ஆகியவற்றை நீக்கிவிட்டு முயற்சிக்கவும்.
- Incognito/Private Mode-ஐப் பயன்படுத்திப் பார்க்கவும்.
- க்ரோம் (Chrome) அல்லது ஃபயர்பாக்ஸ் (Firefox) போன்ற மாற்று பிரவுசர்களைப் பயன்படுத்தவும்.
- இணையத் தொடர்பு சீராக இருப்பதை உறுதிசெய்து கொண்டு, சிறிது நேரம் கழித்து மீண்டும் முயற்சிக்கவும்.
பயப்பட வேண்டாம்
“மாணவர்கள் யாரும் பதற்றமடைய வேண்டாம். ஒருவேளை தொடர்ந்து சிக்கல்களை எதிர்கொண்டால், உங்களது விண்ணப்ப எண்ணுடன் (Application Number) எங்களது உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் அனுப்பலாம். மாணவர்கள் அமைதியுடனும் கவனத்துடனும் தேர்வுக்குத் தயாராகுங்கள். உங்களுக்கு உதவ நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.” என்று தேர்வு முகமை தெரிவித்துள்ளது.









