நீதிமன்றம் பல உத்தரவுகள் பிறப்பித்தும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி பயணம் செய்யும் வகையில் வசதிகள் செய்து கொடுக்காதது குறித்து தலைமைச் செயலாளர் விளக்கமளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (அக்டோபர் 12) உத்தரவிட்டுள்ளது.
கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள் மற்றும் ரயில், பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்த வசதிகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு, கடந்த முறை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 2017 ஆம் ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்துவது தொடர்பாக ரயில்வே துறை, போக்குவரத்துத் துறை ஆகியவை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இவ்வழக்கு மீண்டும் நேற்று நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு நான்காயிரத்திற்கும் அதிகமான பேருந்துகள் வாங்கப்பட்ட போதும் ஒரு பேருந்தில் கூட, மாற்றுத்திறனாளிகளுக்கான எந்த வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இதற்கு அரசு தரப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய பேருந்துகளைக் கொள்முதல் செய்ய அதிக நிதி தேவைப்படுகிறது. வரும் காலத்தில் இதுபோன்ற பேருந்துகள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் 2005ஆம் ஆண்டு முதல்,15 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் பிறப்பிக்கப்பட்ட எந்த உத்தரவுகளையும் செயல்படுத்தாது குறித்து காணொளி காட்சி மூலம் வரும் டிசம்பர் 10 ஆம் தேதி ஆஜராகி தலைமைச் செயலாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
**-பிரியா**
