நீட், ஜெஇஇ தேர்வில் இனி ‘டுபாக்கூர்’ வேலை நடக்காது! என்.டி.ஏவின் அதிரடி… ஃபேஸ் ரீடிங் டெக்னாலஜி வருது!

Published On:

| By Santhosh Raj Saravanan

Facial recognition safety measures in JEE and NEET exams

“தேர்வு அறைக்குள் நுழைந்தது மாணவனா? அல்லது அவனுக்குப் பதில் தேர்வு எழுத வந்த ‘சால்வர்’ (Solver) ஆசாமியா?” – கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெடித்த ஆள்மாறாட்டப் புகார்கள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. “காசு கொடுத்தா யார் வேணும்னாலும் டாக்டர் ஆகலாம்” என்கிற அவப்பெயரைத் துடைக்க, தேசியத் தேர்வு முகமை (NTA) தற்போது ஒரு ஹை-டெக் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

வரும் 2025ஆம் ஆண்டு முதல் நடைபெறவுள்ள ஜேஇஇ (JEE) மற்றும் நீட் (NEET) தேர்வுகளில், ‘ஃபேஷியல் ரெகக்னிஷன்’ (Facial Recognition) எனப்படும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

என்ன மாற்றம்?

இனிமேல் ஹால் டிக்கெட், ஐடி கார்டு மட்டும் இருந்தால் போதாது. தேர்வு மையத்திற்குள் நுழையும் ஒவ்வொரு மாணவரின் முகமும் டிஜிட்டல் முறையில் ஸ்கேன் செய்யப்படும்.

ADVERTISEMENT
  • த்ரீ லேயர் செக்கிங்: தேர்வு மைய நுழைவு வாயில், பதிவு அறை மற்றும் தேர்வு அறைக் கண்காணிப்பு என மூன்று கட்டங்களில் இந்தச் சோதனை நடைபெறும்.
  • ரியல் டைம் செக்: விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் பதிவேற்றிய புகைப்படத்துடன், தேர்வு மையத்திற்கு வரும் மாணவரின் முகம் ஒத்துப்போகிறதா என்று கணினி நொடிப்பொழுதில் கண்டுபிடித்துவிடும்.

ஏன் இந்த முடிவு?

கடந்த காலங்களில் ஆதார் அட்டை, கைரேகை (Biometric) வைத்தெல்லாம் சோதனை செய்தாலும், சில ‘கில்லாடிகள்’ போலியான கைரேகை மற்றும் மார்பிங் செய்யப்பட்ட ஐடி கார்டுகளை வைத்து உள்ளே நுழைந்துவிடுகின்றனர். ஆனால், முகத்தை ஸ்கேன் செய்யும் இந்த முறையில் ஏமாற்றுவது மிகக் கடினம்.

ADVERTISEMENT

“தேர்வு மையங்களில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்கவும், உண்மையான மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதைத் தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை” எனத் தேர்வு முகமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனியார் வசம் ஒப்படைப்பு:

இந்தத் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தத் தனியார் நிறுவனங்களிடமிருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் ஒவ்வொரு மையத்திலும் அதிநவீன கேமராக்கள், சர்வர் இணைப்புகள் மற்றும் பயோமெட்ரிக் கருவிகளை நிறுவுவது அந்த நிறுவனங்களின் பொறுப்பு.

டெக்னாலஜி கொண்டு வருவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், ‘சர்வர் டவுன்’, ‘சிஸ்டம் ஸ்லோ’ என்று சொல்லி தேர்வு மைய வாசலில் மாணவர்களை மணிக்கணக்கில் காக்க வைக்காமல் இருந்தால் சரி. ஏற்கனவே பதட்டத்தில் வரும் மாணவர்களுக்கு, இந்தச் சோதனைகள் கூடுதல் மன உளைச்சலைத் தராமல் இருக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. படிக்கிற பசங்க தைரியமா போங்க… குறுக்கு வழியில போறவங்களுக்குத் தான் இனி கண்டம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share