மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், திரெட்ஸ் ஆகிய தளங்கள் நேற்று இரவு, உலகம் முழுவதும் முடங்கியதால் பயனர்கள் மிகவும் அவதியடைந்தனர்.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களை தங்களால் லாக் இன் செய்ய முடியவில்லை, மெசேஜ் அனுப்ப முடியவில்லை என்று பயனர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து மெட்டா செய்தித் தொடர்பாளர் ஆண்டி ஸ்டோன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “இன்று தொழில்நுட்பச் சிக்கலால், எங்களின் சில சேவைகளை அணுகுவதில் மக்கள் சிரமப்பட்டனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முடிந்தவரை விரைவாக சிக்கலைத் தீர்த்துவிட்டோம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து எக்ஸ் வலைதளத்தில் #Instagramdown #Facebookdown என்ற ஹேஷ்டாக்குகள் டிரெண்டானது. மெட்டா முடங்கியது குறித்து எக்ஸ் தளம், “நீங்கள் ஏன் இப்போது எக்ஸ் தளத்தை பயன்படுத்துகிறீர்கள் என்று எங்களுக்கு தெரியும்” என நக்கலாக பதிவிட்டுள்ளது.
அதேபோல எலான் மஸ்க், “எங்கள் சர்வர் வேலை செய்வதால் தான் நீங்கள் இந்த பதிவை படித்துக்கொண்டிக்கிறீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கிய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் மீண்டும் இயங்க துவங்கின. மெட்டாவின் சர்வர்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் தான், இந்த பின்னடைவுக்கு காரணம் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மெட்டாவால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ்அப் தளம் முடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…