“ஃபேஸ் வாஷ் மற்றும் க்ளென்ஸர் ஆகிய இரண்டும் முகத்தை சுத்தம் செய்வதற்கு உதவுகின்றன என்றாலும் க்ளென்ஸர், ஃபேஸ்வாஷ் இரண்டும் வெவ்வேறு தன்மைகளைக் கொண்டுள்ளன’’ என்கிறார்கள் காஸ்மெட்டாலஜிஸ்ட்ஸ். ஃபேஸ் வாஷ், க்ளென்ஸர் குறித்து அவர்கள் பகிரும் தகவல்கள் இங்கே…
‘’அதிக அளவில் தூசு உள்ள இடங்களுக்குச் சென்றுவிட்டு வரும்போது முகத்திலும் அதிக அளவில் அழுக்குகள் சேரும். அப்படிப்பட்ட சமயங்களில் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம். ஆனால், தினமும் தொடர்ந்து ஃபேஸ் வாஷ் மட்டுமே பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்து வந்தால், சருமத்தில் இருக்கும் ஈரப்பதம் நீங்கி சருமம் டிஹைட்ரேட் (Dehydrate) ஆவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
எனவே, ஒரு வேளைக்கு ஃபேஸ் வாஷ், அடுத்த வேளைக்கு க்ளென்ஸர் என மாற்றி மாற்றிப் பயன்படுத்தும்போது முகம் டிஹைட்ரேட் ஆகாமல் தவிர்க்க முடியும்.
க்ளென்ஸரைப் பொறுத்தவரையில் அது முகத்தில் இருக்கும் அழுக்கை நீக்குவதுடன், முகத்தின் ஈரப்பதத்தையும் தக்க வைக்கும். எந்த பிராண்டில் க்ளென்ஸர் வாங்கினாலும், அந்த டியூப்/பாட்டிலுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டிருக்கும் சேர்ப்புப் பொருட்களை (ingredients) கவனிக்க வேண்டியது அவசியம்.
அதில் பாராபென் ஃப்ரீ (Paraben free), சல்ஃபேட் ஃப்ரீ (Sulphate free) என்று குறிப்பிடப்பட்டிருக்கும் க்ளென் ஸரை தாராளமாகப் பயன்படுத்தலாம். இது சருமத்திற்கு எந்தவொரு கேட்டையும் விளை விக்காது.
தவிர, ஆர்கானிக் க்ளென்ஸர்கள் இப்போது சந்தையில் பரவலாகக் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். வீட்டிலேயே எளிமையான முறையில் சில க்ளென்ஸர்களைத் தயாரித்துப் பயன்படுத்தினால், இன்னும் சிறப்பு. அவற்றில் சில உங்களுக்காக…
தேவையான அளவில் கெட்டித் தயிருடன் சில வெள்ளரித் துண்டுகளைச் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி நன்றாக க்ளென்ஸ் செய்து பின்னர் முகத்தைக் கழுவுங்கள்.
முகத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் முழுமையாக நீங்கிவிடும். கருந்திட்டுகள் மற்றும் உலர் சருமம் கொண்டவர்கள் இந்த க்ளென்ஸரை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
தலா ஐம்பது மில்லி எலுமிச்சைச் சாறு மற்றும் டிஸ்டில்டு வாட்டர்/மினரல் வாட்டரை எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் நன்கு கலந்துகொள்ளுங்கள். மூன்று முதல் நான்கு சொட்டுகள் வைட்டமின்-ஈ எண்ணெயை இக்கலவையில் சேருங்கள். சோப்நட் (Soap nut) எனப்படும் பூந்திக்கொட்டையைத் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரைக் கொஞ்சம் எடுத்து இக்கலவையில் சேருங்கள்.
இவை அனைத்தையும் நன்றாகக் கலந்து குலுக்கி விட்டு, ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை க்ளென்ஸராகப் பயன்படுத்தலாம். பருக்கள் மற்றும் எண்ணெய்ப்பசையுள்ள சருமம் கொண்டவர்கள் இந்த க்ளென்ஸரைப் பயன்படுத்தி முகத்தை சுத்தம் செய்யலாம்.
ஹெவி மேக்கப்பை ரிமூவ் செய்ய, விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் மூன்று அல்லது நான்கு சொட்டுகள் வைட்டமின்-ஈ எண்ணெயைச் சேருங்கள்.
இக்கலவையை நன்றாகக் கலக்கி ஒரு டப்பாவில் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். இதனை பஞ்சில் தொட்டு முகத்தில் அழுத்தித் தேய்த்து எடுத்தால், மேக்கப்கை சுலபமாக நீக்கிவிடலாம். நார்மல் சருமம், உலர் சருமம் இரண்டுக்குமே ஏற்றது.’’
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐபிஎல் ஏல பரிதாபங்கள் : அப்டேட் குமாரு
ராமதாஸை இன்சல்ட் செய்த ஸ்டாலின்… ’வேலை’யைக் காட்ட பாமக திட்டம்!
விடிய விடிய குடி காலையில் பலி… 60 வயதுக்காரருடன் தங்கிய 27 வயது இளம் பெண் இறந்த பின்னணி!