2ஜி தீர்ப்பு மேல்முறையீடு!

Published On:

| By Balaji

2 ஜி வழக்கு தீர்ப்பு இன்று (டிசம்பர் 21) வெளியாகியுள்ள நிலையில், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது மத்திய அமலாக்கத்துறை.

2ஜி வழக்கு குறித்த பொதுநல மனுவை தாக்கல் செய்தவர் பாஜக பிரமுகரான சுப்பிரமணிய சாமி. இதன் அடிப்படையில் சிபிஐ தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று, இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி ஓ.பி.சைனி.

சிபிஐ தனி நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதைக் காண, சுப்பிரமணிய சாமி பாட்டியாலா வந்திருந்தார். அவர் நீதிமன்ற வளாகத்தினுள் நுழைவதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பிறகு, அவர் நீதிமன்றத்தினுள் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், நீதிபதி சைனி தீர்ப்பு வழங்கியபிறகு, நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார். அதன்பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, அரசு உடனடியாக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அதே நேரத்தில், தங்கள் தரப்பு வாதங்களை சிபிஐ தனி நீதிமன்றம் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றிருக்கிறது மத்திய அமலாக்கத்துறை. முழு தீர்ப்பும் வெளியானபிறகு, அதுபற்றி சட்டப்பூர்வமான கருத்து பெறப்படும் என்றும், அதன்பிறகு சிபிஐ தனி நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், மத்திய அமலாக்கத்துறை இயக்குனர் கர்னல் சிங் சார்பில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் சிபிஐ இயக்குனர் ஏபி சிங், 2ஜி வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share