விமர்சனம்: குரங்கு பொம்மை!

Published On:

| By Balaji

தஞ்சாவூரில் மர அறுவை மில் வைத்திருப்பவர் ஏகாம்பரம் (பி.எல்.தேனப்பன்). திருட்டு, கொலை என்று ஊரறிந்த ரவுடி. இவரிடம் மிகவும் நம்பிக்கைக்குரியவராகப் பல ஆண்டுகளாக வேலை பார்த்துவருகிறார் சுந்தரம் (இயக்குநர் பாரதிராஜா). சுந்தரத்தின் மகன் கதிர் (விதார்த்) சென்னையில் கார் டிரைவராக வேலை செய்கிறார். தன் அப்பா ஏகம்பரத்திடம் வேலை செய்வது இவருக்குப் பிடிக்கவில்லை.

ADVERTISEMENT

அப்பா, மகன் இருவரின் கோணங்களிலும் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நித்திலன். ஒன்று தஞ்சாவூரிலிருந்து ஒரு பையுடன் சென்னைக்குப் போகும் பாரதிராஜாவின் கோணத்திலும், மற்றொன்று சென்னையில் ஒரு பெரியவரின் பையை ஒருவன் திருடிச் செல்ல முற்படும்போது அவனைத் துரத்திப்பிடிக்கும் விதார்த்தின் பார்வையிலிருந்தும் சொல்லப்படுகிறது. இரண்டிலும் பொதுவாக இருப்பது அந்தக் குரங்கு பொம்மை போட்ட பை. அந்தப் பையில் இருப்பது என்ன என்பது மிக சுவாரசியமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண நடுத்தரக் கும்பம் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்சினைகளை நம் கண்முன்னே படமாக்கிக் காட்டுகிறது இப்படம். அவசரத் தேவையின்போது ஏடிஎம் மெஷினில் கார்ட் மாட்டிக்கொண்டு பணம் எடுக்க முடியாமல் பரிதவிப்பது, சமூக வலைதளங்களின் பயன்பாடு, பிறர் பொருள் மீதான ஆசை, பணத்துக்காக எதையும் செய்யத் துணிவது, கந்துவட்டி என்று பல நிடப்புகளைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறது இந்தக் குரங்கு பொம்மை.

ADVERTISEMENT

ஊரே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஒருவரிடம் தனக்கு உண்டான நட்பைக் குட்டிக் கதையாகச் சொல்லும் பாரதிராஜா நடிப்பில் அசத்தியிருக்கிறார். தனக்கே உண்டான கரகர குரலில் பேசி, முதுமையான தந்தை கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, விழித்திரு என்று தனக்கென ஒரு பாதை அமைத்துச் சிறந்த கதையைத் தேர்வுசெய்து நடித்துவரும் விதார்த், இப்படத்திலும் ஒரு சராசரி மனிதனாக வந்து ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார். பாரதிராஜா, விதார்த் இருவரும் ஒரே ஒரு கட்சியில் மட்டுமே இணைந்து வருகின்றனர்.

நாயகி டெல்னாவுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை. கொடுக்கப்பட்ட வேலையைச் சிறப்பாகவே செய்திருக்கிறார். நன்றாக வார்க்கப்பட்ட கதாபாத்திரங்களில் பாலா சிங், குமாரவேல், கஞ்சா கருப்பு, கல்கி, ரமா ஆகிய அனைவருமே நன்கு பொருந்தியிருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் இந்தப் படத்தில் தன் நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெறுவது உறுதி. இதுவரையில் குணசித்திர நடிப்பை வெளிக்காட்டிய குமரவேல், இந்தப் படத்தில் நடிப்பில் புதிய பரிமாணத்தைக் காண்பித்திருக்கிறார்.

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கான நடிகரையும் பொருத்தமாகத் தேர்வுசெய்து, அவர்களிடம் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர் நித்திலன்.

பாசம், நட்பு, துரோகம் ஆகிய உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு வாழ்க்கையை யதார்த்தமாகக் காண்பித்திருக்கிறார் இயக்குநர். சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் வரும் பதிவுகள் வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்த்துகின்றன. அஜனீஷ் லோக்நாத் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்குப் பலம் சேர்த்திருக்கின்றன. உதயகுமாரின் ஒளிப்பதிவு நடுத்தரக் குடும்பத்தின் வாழ்க்கையை இயல்பாகப் பிரதிபலிக்கிறது.

பணத்தை முக்கியக் கருவாக கொண்டு அதனை ஒட்டி வடிவமைக்கப்பட்ட இந்தப் படத்தில் கதாபாத்திர வார்ப்புகள் ரசிக்கும்படியாக இருந்தாலும் சினிமாத்தனமான சில அம்சங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கதாபாத்திரத் தேர்வையும் நடிப்பையும்போலத் திரைக்கதை வேகத்திலும் சற்றுக் கூடுதல் கவனத்தை செலுத்தியிருந்தால் இந்த பொம்மை கூடுதல் வரவேற்பைப் பெற்றிருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share