சிவகங்கை மாவட்டம் கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வைத் தொடங்கிவைத்த தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், இந்த ஆண்டு 6 இடங்களில் புதிதாக அருங்காட்சியகங்கள் அமைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் முதல்முறையாக அகழாய்வு நடத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்னதாக, அவ்வட்டாரத்தில் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் தமிழர்களின் பழமையான கலாச்சாரம் குறித்த சான்றுகள் கிடைத்ததின் அடிப்படையில் இது முன்னெடுக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு இரண்டாம் கட்ட அகழாய்வு நடந்தது. முதல் இரண்டு கட்ட அகழாய்வின் பொறுப்பாளராக இருந்தார் மத்தியத் தொல்லியல் துறை பெங்களூரு பிரிவு அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன். 2017ஆம் ஆண்டு நடந்த மூன்றாவது கட்ட அகழாய்வின்போது பி.எஸ்.ஸ்ரீராமன் என்பவர் கீழடி ஆய்வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இம்மூன்று ஆய்வுகளும் மத்தியத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை, தமிழக அரசின் சார்பில் கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. முதல் 2 அகழாய்வில் கிடைத்த பொருட்களில் சில சுமார் 2,300 ஆண்டுகள் பழமையானவை என்று கார்பன் சோதனையில் தெரிய வந்ததாகத் தெரிவித்திருந்தது மத்தியத் தொல்லியல் துறை. முதல் 4 ஆய்வுகளில் கிடைத்த 14,638 பொருட்களைக் காட்சிப்படுத்துவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கீழடியில் 5ஆவது கட்ட அகழாய்வு விரைவில் தொடங்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன்னர், கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று காரணம் கூறப்பட்டது.
இந்த நிலையில், இன்று (ஜூன் 13) கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வைத் தொடங்கிவைத்தார் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, கீழடி அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைப்பதற்கான அகழ் வைப்பகம் அமைக்கத் தமிழக அரசு 1 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
“அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட 14,638 பொருட்கள் இந்த அகழ் வைப்பகத்தில் வைக்கப்படும். இதற்காக 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை அமைப்பதற்கு, பாடநூல் நிறுவனம் 1 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழகத்திலுள்ள அனைத்துப் பள்ளிக் குழந்தைகளையும், இது போன்ற அருங்காட்சியகத்துக்கு அழைத்துச் செல்ல உத்தரவிடப்படும். வரலாற்று ஆய்வகம் போல, தமிழகத்திலுள்ள 36 அருங்காட்சியகங்களும் செயல்படும்” என்று அவர் கூறினார்.
வரும் ஆண்டில் 6 இடங்களில் புதிதாக அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுமென்று உறுதியளித்தார் பாண்டியராஜன். “வரும் ஆண்டில் தேனி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் மாவட்ட அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை, அழகன்குளம் இடங்களில் பார்வையாளர் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். அருங்காட்சியகங்கள் இல்லாமலிருக்கும் நாமக்கல், திருப்பூர், பெரம்பலூரில் அடுத்த ஆண்டில் அருங்காட்சியகங்கள் திறக்கப்படும்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**
**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**
�,”