மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருகேயுள்ள உச்சம்பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. 1,500க்கும் மேற்பட்டவர்கள் வசித்துவரும் இந்த முகாமில், அகதிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை தணிக்கை செய்வதற்காக மாதம் 2 முறை அங்கு அதிகாரிகள் செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று, வருவாய் ஆய்வாளர் துரைப்பாண்டி தணிக்கை பணிக்காக சென்றிருந்தபோது ரவீந்திரன் என்பவரின் கடைசி மகன் பிரவீன், முகாமில் இல்லாதது தெரியவந்தது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரவீன், திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக ரவீந்திரன் கூறியதை, ஏற்றுக்கொள்ளாத வருவாய் ஆய்வாளர் துரைப்பாண்டி, ரவீந்திரனையும் அவரது குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், ‘உங்கள் குடும்பத்தையே இங்கு இருக்க முடியாமல் செய்துவிடுவேன்’ என்று துரைப்பாண்டி மிரட்டவே, அகதி வாழ்வின் அவலநிலை மற்றும் மகனின் உடல்நிலையால் நிலைகுலைந்து போயிருந்த ரவீந்திரன், முகாமுக்கு அருகில் இருந்த உயரழுத்த மின்கோபுரத்தின்மீது ஏறி, மின் கம்பியைப் பிடித்து தற்கொலை செய்துகொண்டார். ஒரே நொடியில், 11 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாய்ந்ததில், அவரது உடல் எரிந்து மின் கோபுரத்திலிருந்து தூக்கி எறியப்பட்ட காட்சியைப்பார்த்த முகாம்வாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
மதியம் 2 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தையடுத்து, அங்கு திரண்ட முகாம்வாசிகள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, இந்த தற்கொலைக்குக் காரணமான வருவாய் ஆய்வாளர் துரைப்பாண்டியை கைது செய்யவேண்டும் என்றும், அதுவரை ரவீந்திரனின் உடலை எடுக்க விடமாட்டோம் என்றுகூறி மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தந்தை பலியான தகவலறிந்துவந்த பிரவீன், ஆற்றமுடியாத சோகத்தில் கதறி அழுதார். மறியல் போராட்டத்தை நிறுத்த உசிலம்பட்டி கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் உட்பட, பல்வேறு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததையடுத்து, மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் இரவு 9.10 மணிக்கு அங்கு வந்து போராட்டக்கார்களிடம் பேசினார்.
ரவீந்திரனின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டதால், இரவு 10 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ரவீந்திரனின் உடல் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து, வருவாய் ஆய்வாளர் துரைப்பாண்டிமீது தற்கொலைக்குத் தூண்டியதாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அங்குள்ள அகதிகள், தணிக்கை என்ற பெயரில் அதிகாரிகள் சித்திரவதை செய்வதாகவும், பலியான ரவீந்திரனுக்கு 4 மகள்கள், 2 மகன்கள் உள்ளதால் அவரது குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை பழ.நெடுமாறன், ஜி.ராமகிருஷ்ணன் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். இந்தச் சம்பவம், முகாம்களில் அகதிகள் நடத்தப்படும்விதத்தை வெளி உலகுக்கு உணர்த்தியுள்ளது.
