ஆஸ்திரேலியாவைக் கலங்கடித்த இந்தியர்!

Published On:

| By Balaji

ஆஸ்திரேலிய ஏ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ், ஒரே இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலியாவை ஆட்டம் காண வைத்துள்ளார்.

இந்தியா ஏ, ஆஸ்திரேலியா ஏ அணிகள் பங்கேற்கும் அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ பேட்டிங்கைத் தேர்வு செய்தது. உஸ்மான் கவாஜா, குர்திஸ் பேட்டர்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தனர். அப்போதுதான் சிராஜ் தனது விக்கெட் வேட்டையைத் தொடங்கினார். அவரது வேகத்தில் பேட்டர்சன், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹான்ட்ஸ்காம்ப், மிட்செல் மார்ஷ் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் கவாஜா, லாபுஸ்சாக்னேவுடன் இணைந்து மீண்டும் பாட்னர்ஷிப்பை தொடர ஆரம்பித்தார். இந்த ஜோடி 114 ரன்களை சேர்த்த நிலையில், லாபுஸ்சாக்னே 60 ரன்கள் சேர்த்து சிராஜிடம் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

ADVERTISEMENT

அதன்பிறகு ஆஸ்திரேலிய அணி மீண்டும் தடுமாறத் தொடங்கியது. இதற்கிடையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து கழட்டிவிடப்பட்டு, இந்தப் போட்டியில் ஆடிவரும் குல்தீப் யாதவ் அவர் பங்குக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் ஆஸ்திரேலியா 243 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முகமது சிராஜ், 59 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே அவரது சிறந்த பந்துவீச்சாகும். பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்திருந்தது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share