ஈஷா ஷ்ரோத்ரியா, சந்தனு பச்சோரி Extraordinary laws becoming ordinary
ஜூன் மாதம், சாதாரண வழக்குகளில் அசாதாரண சட்டங்களைத் தவறாகப் பயன்படுத்துவதைப் பற்றி உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான நினைவூட்டலை அனுப்பியது. Extraordinary laws becoming ordinary
2023இல் இரு தரப்பினரிடையே நடந்த மோதல் தொடர்பான ஒரு வழக்கை நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருந்தது. இதில் உத்தரப் பிரதேச குண்டர்கள் மற்றும் சமூக விரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டம் 1986 பயன்படுத்தப்பட்டிருந்தது.
இத்தகைய சட்டங்களைத் துன்புறுத்துவதற்கான கருவிகளாகப் பயன்படுத்த முடியாது என்றும், அரசியல் நோக்கங்கள் இதில் இருக்கக்கூடும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. கடுமையான, அசாதாரணமான சட்டங்கள் பயன்படுத்தப்படும்போது தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு தரும் உத்தரவாதம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது என்று நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அடியொற்றி உத்தரப் பிரதேச அரசு உருவாக்கிய வழிகாட்டுதல்களைக்கூடப் பூர்த்தி செய்யாமல் குண்டர்கள் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அமர்வு கூறியது. அரசு உருவாக்கிய வழிகாட்டுதல்களில் ஒருங்கிணைந்த குற்றச் செயல்பாடு, வன்முறை, அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கான ஆதாரம் ஆகியவை அடங்கும். அதாவது, இத்தகைய சம்பவங்களின்போது மட்டுமே குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். Extraordinary laws becoming ordinary
இந்தத் தீர்ப்பு தவறான ஒரு போக்கைக் கடுமையாக விமர்சிக்கிறது. அன்றாடக் காவல் மற்றும் நிர்வாகத்தில் சிறப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவது சகஜமாகிவருவதுதான் அந்தப் போக்கு.
உதாரணமாக, 2021இல் மணிப்பூர் பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்க்கெம் மீது, மாநில அரசை விமர்சித்த ஒரு ஃபேஸ்புக் பதிவிற்காக, தேசியப் பாதுகாப்புச் சட்டம் 1980 பிரயோகிக்கப்பட்டது. பொது ஒழுங்கு அல்லது தேசியப் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற போதிலும், அவரைத் தடுத்துவைக்க அது பயன்படுத்தப்பட்டது.
இதேபோல், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தடுப்புக் காவல் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் சிவில் உரிமைகள் சங்கம் தயாரித்த ஒரு வரைவு அறிக்கையின்படி, தேசிய குற்றப் பதிவுகள் பணியகத்தின் 2015-2020 தரவுகளை ஆய்வு செய்ததில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967இன் கீழ் மொத்தம் 5,924 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்தக் காலகட்டத்தில் 8,371 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில், 235 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். அதாவது, கைதுசெய்யப்பட்டவர்களில் 2.8% பேர் மட்டுமே தண்டனை பெற்றிருக்கிறார்கள். Extraordinary laws becoming ordinary
சிறப்புச் சட்டங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படுவது, அசாதாரண சூழ்நிலைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருவி இப்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வழக்கமான கருவியாகக் குறுக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. தடுப்புக் காவல் சட்டங்கள்முதல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்வரை, அசாதாரண சட்டக் கட்டமைப்புகளின் பயன்பாடு வழக்கமானதாகவும் சாதாரணமாகவும் மாறிவிட்டது.
இந்த மாற்றத்தின் மிகத் தெளிவான அறிகுறி சமீபத்தில் உச்ச நீதிமன்றத்திடமிருந்து வந்தது. அது இணையக் குற்றவாளிகளுக்கு எதிராகத் தடுப்புக் காவல் பயன்படுத்தப்படுவதைப் பாராட்டியது. வழக்கமான சட்டங்கள் இதற்குப் போதுமானதாக இல்லை என்று கூறியது.
ஆனால் இது மிகவும் சிக்கலானது. இது குற்றவியல் நீதி அமைப்பையே அரிக்கக்கூடிய விளைவைக் கொண்டுள்ளது.
சாதாரண சட்டங்கள் நீதியைத் திறம்பட வழங்கத் தவறுவதை வைத்து, சிவில் உரிமைகளை அரிக்கக்கூடிய கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்த முடியாது.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், நிதி சார்ந்த குற்றங்கள், பசுவதை, ஆன்லைனில் ஆட்சேபகரமான பேச்சு என அனைத்தையும் சமாளிக்கச் சிறப்புச் சட்டங்களை அதிகமாகச் சார்ந்து இருப்பது, குற்றவியல் நீதி அமைப்பில் பெரும் சிரமங்களை உருவாக்கியுள்ளது. இந்திய நிறுவனங்கள் ஏற்கனவே பொதுச் சட்டங்களைச் செயல்படுத்தவே போராடி வருகின்றன. நீதிபதிகள் அதிகச் சுமையுடன் உள்ளனர். காவல் துறைக்குப் போதிய பயிற்சி இல்லை. சட்ட உள்கட்டமைப்பு போதுமானதாக இல்லை.
இந்நிலையில் சிறப்புச் சட்டங்கள் கோரும் அபரிமிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்துவது சாத்தியமற்றது. சிறப்புச் சட்டங்களுக்குத் துல்லியம், கட்டுப்பாடு, செயல்முறையில் சீர்மை ஆகியவை தேவை. ஆனால் நடைமுறையில், அவை மனம் போன போக்கில் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் உரிமைகள் மீறப்படுகின்றன.
சிறப்புச் சட்டங்களை இப்படிச் சார்ந்திருப்பது சாதாரண அல்லது பொதுச் சட்டங்களைச் செல்லாததாக்குகிறது. முதல் தகவல் அறிக்கையில் UAPA அல்லது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவுகள் சேர்க்கப்பட்டால், வழக்கின் மொத்தச் செயல்முறையும் மாறிவிடுகிறது. இதுபோன்ற சட்டங்களைப் பயன்படுத்தும்போது, குற்றம் சாட்டப்பட்டவருக்குப் பிணை கிடைப்பது கடினமாகிறது, விசாரணைகள் நீள்கின்றன, குற்றத்தை நிரூபிக்க வேண்டிய சுமை குற்றம் சுமத்துபவரிடமிருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாற்றப்படுகிறது. சிறப்புச் சட்ட நடைமுறை பொது நடைமுறையை மீறுகிறது. விசாரணைச் செயல்முறையே தண்டனையாக மாறுகிறது. உயர் நீதிமன்றங்கள் இறுதியில் இந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்தாலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கான சேதம் ஏற்கனவே நடந்துவிடுகிறது.
காலனித்துவச் சுமை Extraordinary laws becoming ordinary
இந்தியாவின் தடுப்புக் காவல் மற்றும் பொது ஒழுங்குச் சட்டங்கள், காலனித்துவ ஆட்சியில் கிளர்ச்சிகளை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் அசாதாரண அதிகாரங்களைப் பயன்படுத்தியபோது இருந்த காலனித்துவ நிர்வாகத்திலிருந்து உருவானவை. கிளர்ச்சி, குழப்பம் பற்றிய காலனித்துவ அச்சங்களில் உருவான இந்தச் சட்டங்கள், குறிப்பிட்ட குற்றங்களைத் தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல. அரசுக்கு எதிரான துரோகிகளையும் கட்டுப்பாடற்றவர்கள் என்று கருதப்பட்ட பெரிய மக்கள் திரளையும் சமாளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை.

காலனித்துவ ஆட்சியாளர்கள் தடுப்புக் காவல், குறைந்தபட்ச நீதித்துறை ஆய்வு, சந்தேகம், முன்கூட்டியே தடுத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் காவலர்களால் நடத்தப்படும் ஆட்சியை உருவாக்கினார்கள். இப்போது இவற்றைப் பின்பற்றுவதன் மூலம், காலனித்துவ சர்வாதிகார அடக்குமுறை மனப்பான்மையை இறக்குமதி செய்யும் அபாயத்தில் நாம் இருக்கிறோம்.
சிறப்புச் சட்டங்களை விதிவிலக்குகளாகவே பயன்படுத்த வேண்டும் என்பதை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய நேரம் இது என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நினைவூட்டுகிறது.
ஜனநாயக அரசுகள் ஒருமித்த கருத்து, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் மூலம் ஆட்சி செய்ய வேண்டும். அச்சம், அசாதாரண அதிகாரம் ஆகியவற்றின் மூலம் அல்ல. சிறப்புச் சட்டங்கள் அதிகரிப்பதும் அவற்றைச் சாதாரணச் சட்டம்போலப் பயன்படுத்துவதும் சட்ட அமலாக்கத்தின் தோல்வியை மட்டுமல்ல, ஆழமான அரசியல் தோல்வியையும் வெளிப்படுத்துகிறது.
அவசரத் தேவையின் பலிபீடத்தில் சட்டப்படியான செயல்முறையைத் தியாகம் செய்தால், நாம் பாதுகாக்கிறோம் என்று கூறும் சுதந்திரங்களையே சிதைத்துக்கொண்டிருப்போம்.
ஈஷா சின்ஹா, சந்தனு பச்சோரி பெங்களூரு, ஆர்வி பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் உள்ள குற்றவியல் நீதி ஆய்வுகள் மையத்தின் உதவிப் பேராசிரியர்கள், இணை இயக்குநர்கள்.
நன்றி: தி ஸ்க்ரால் இணைய இதழ் Extraordinary laws becoming ordinary
