தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் SIR படிவங்களை சமர்ப்பிக்க மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கேரளா, குஜராத் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நவம்பர் 4 ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 6,41,14,587 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களுக்காக 6,41,10,380 கணக்கெடுப்பு படிவங்கள் (99.99%) இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளது. அவற்றில் 6,40,83,413 கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் (99.95%) செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 68,470 வாக்குச் சாவடி அலுவலர்களும் 2,46,069 வாக்குச்சாவடி முகவர்களும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைப் பெறுவதற்கு இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து டிசம்பர் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்றுடன் கால அவகாசம் முடிவடைய இருந்த நிலையில் SIR படிவங்களை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் படிவங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
