பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான அன்வர் ராஜா இன்று ஜூலை 21-ந் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்து கொண்டார். AIADMK Anvar Raja
அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து சீனியரான அன்வர் ராஜா டெல்லியில் அக்கட்சியின் முகமாக இருந்து வந்தவர். பல முக்கிய தருணங்களில் அதிமுகவின் நிலைபாடுகளை பாராளுமன்றத்தில் உரத்த குரலில் பதிவு செய்தவர்.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சார பணிகளில் முழு வீச்சில் இறங்கி உள்ளன. இந்நிலையில் இந்த சட்ட மன்ற தேர்லிலும் பாஜக – அதிமுக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா அதிமுக -பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இதைத்தொடரந்து இன்று காலை அன்வர் ராஜா தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்தார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டுள்ளார்.
யார் இந்த அன்வர் ராஜா?
கடந்த 2001 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து 2001 முதல் 2006 வரை தமிழக அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக பணியாற்றினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் கடந்த 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டு தேர்தல்களில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்த நிலையில் அன்வர் ராஜா தனது விமர்சன கருத்துக்களை அவ்வப்போது வெளிப்படையாக தெரிவித்தார்.
தமிழகத்தில் பாஜக ஒரு போதும் காலூன்ற இயலாது என்று வெளிப்படையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அன்வர் ராஜா திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் அதிமுகவிலிருந்து அவரை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
