ADVERTISEMENT

பெண் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம்? அதானி சர்ச்சையில் அடுத்த கட்டம்!

Published On:

| By Aara

கடந்த நவம்பர் 2 ஆம் தேதி நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் முன் ஆஜரான திருணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா, தனது பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக குழுவின் தலைவர் கேள்வி கேட்டதால் விசாரணையின் பாதியிலேயே வெளிநடப்பு செய்தார். இதுகுறித்து மின்னம்பலத்தில், ‘அதானியை கேள்வி கேட்டால் அந்தரங்கத்தைக் கேள்வி கேட்கிறார்கள் என்ற தலைப்பில் நவம்பர் 4 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில், மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதான புகாரில்  மஹுவா மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்து நீக்குவதற்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு பரிந்துரைத்துள்ளதாக அதிர்ச்சி செய்திகள் பரவி வருகின்றன.

ADVERTISEMENT

நேற்று என்.டி.டி.வி. செய்தி நிறுவனத்தில் வெளியான தகவல்தான் இதுகுறித்த பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளது.
மஹுவாய் மொய்த்ரா மீது நடத்தப்பட்ட விசாரணை குறித்து 500 பக்க அறிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைகள் தயாரித்துள்ளது. அந்த அறிக்கையை என்.டி.டி.வி. பார்வையிட்டதாக குறிப்பிடப்பட்டு அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

அந்த அறிக்கையில், “மஹுவா மொய்த்ராவின் நடவடிக்கைகள் மிகவும் ஆட்சேபனைக்குரியது, நெறிமுறையற்றது, கொடூரமானது. இது ஒரு குற்றவியல் நடவடிக்கை.  மஹுவா மொய்த்ரா, அங்கீகரிக்கப்படாத நபர்களுடன் தனது மக்களவை இணைய தள பயனர் ஐடியைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் இருந்து பணம் மற்றும் வசதிகளைப் பெற்றிருக்கிறார். அது கடுமையான தண்டனைக்கு வழி வகுக்கும் குற்றமாகும்.

மஹுவா மொய்த்ரா மற்றும் தர்ஷன் ஹிரானந்தனி ஆகியோருக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை, மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் குறித்து இந்திய அரசு சட்ட ரீதியாக உரிய விசாரணை அமைப்புகள் மூலமாக காலக்கெடு நிர்ணயித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று அந்த அறிக்கை கூறுவதாக என்.டி.டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை தங்களால் பார்க்கப்பட்டதாகவும் என்.டி.டி.வியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த அறிக்கை இன்று மாலை நடக்கும் நெறிமுறைகள் குழுவின்  கூட்டத்தில்தான்  வைக்கப்பட உள்ளது. அதன் பின் மக்களவை சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழு வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ஆனால் நேற்றே இந்த அறிக்கை பற்றி என்.டி.டி.வி.செய்தி வெளியிட்டிருக்கிறது.

 

கடந்த நவம்பர் 2 ஆம் தேதியன்று நடந்த விசாரணையில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு தலைவர் வினோத் சோங்கர், ‘நீங்கள் தர்ஷன் ஹிராநந்தினியை டியர் ஃப்ரண்ட் என்கிறீர்கள். அவர் உங்களுக்கு எப்படி டியர் ஆனார்? நீங்கள் பின்னிரவு வரை யார் யாரோடு போனில் பேசுவீர்கள்? நீங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த பயணங்களில் எங்கெங்கே எந்தெந்த ஹோட்டல்களில், யாரோடு தங்கியிருந்தீர்கள்” என்றெல்லாம் கேட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விசாரணையில் இருந்து வெளிநடப்பு செய்தார் மஹுவா மொய்த்ரா.
நெறிமுறைகள் குழுவின் விசாரணை இன்று (நவம்பர் 9) மாலை நடக்க இருக்கும் நிலையில் நேற்று அக்குழுவின் அறிக்கையே என்.டி.டி.வியில் வெளியாகியிருக்கிறது.

இதைக் குறிப்பிட்டு திருணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா இன்று (நவம்பர் 9) மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு அவசர கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “என் மீது நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நடத்திய விசாரணையின் அறிக்கை இன்று (நவம்பர் 9) அந்த குழுவின் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் முன்பே, நேற்று அந்த 500 பக்க அறிக்கையின் பரிந்துரைகள் பற்றி என்.டி.டி.வியில் செய்தி வெளிவந்துள்ளது. இது மக்களவை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும்.

மேலும்  இந்த செய்தியை வெளியிட்ட என்.டி.டி.வி. நிறுவனம் அதானி குழுமத்துக்குச் சொந்தமானது.   அந்த அதானி குழுமத்தின் கார்ப்பரேட் மோசடிகளைப்  பற்றித்தான் நான் நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தேன்.

அப்படிப்பட்ட அதானி குழுமத்தால் நடத்தப்படும் என்.டி.டி.வி. செய்தி நிறுவனத்தில், என் மீது நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு நடத்திய விசாரணையின் அறிக்கை வெளியாவது என்பது நாடாளுமன்றத்தின் விதிமுறைகளை சுக்கு நூறாக்கிய செயலாகும்.

இப்படிப்பட்ட அசாதாரண நிலையில் கூட தங்களது செயலற்ற தன்மையும், அக்கறையற்ற தன்மையும் துரதிர்ஷ்டவசமானது. ஆயினும் இதுகுறித்து உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டிய கடமை எனக்கு இருப்பதால் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார் மஹுவா மொய்த்ரா.

அதானியை எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் திருணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது விரைவில் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற செய்தி தேசிய அரசியல் வட்டாரங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வேந்தன்

எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு!

அதிமுக வேஷ்டி கட்டுவது தனிப்பட்ட விருப்பம்: வைத்திலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share