நாளை தொடங்கும் ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ வட்டி குறைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி அடுத்த வாரம் தனது பணவியல் கொள்கை (MPC) அறிவிப்பை வெளியிட உள்ளது. இதில், ரெப்போ வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25% ஆக மாற்றலாம் என பல பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். பணவீக்கம் குறைவாக இருப்பதும், நாட்டின் பொருளாதாரம் வலுவாக வளர்ந்து வருவதும் இந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டிசம்பர் 3 முதல் 5 வரை நடைபெறும் இந்த பணவியல் கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா டிசம்பர் 5 அன்று முடிவை அறிவிப்பார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்தே ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்கத் தொடங்கியது. இதுவரை மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைவாக இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் எதிர்பார்ப்புகளை மீறி சிறப்பாக உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இரண்டாவது காலாண்டில் 8.2% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆறு காலாண்டுகளில் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியாகும்.
ஈசிலோன் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பிரமோத் கதிரியா கூறுகையில், “டிசம்பர் மாத MPC கூட்டத்தை நெருங்கும்போது, ரிசர்வ் வங்கி தனது எச்சரிக்கையான மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்ட நிலைப்பாட்டைத் தொடரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பணவீக்கம் குறைந்து, மேக்ரோ சூழல் சீரடைந்து வருவதற்கான அறிகுறிகள் வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கான வாய்ப்பை வலுப்படுத்தியுள்ளது. இருந்த போதிலும், ரிசர்வ் வங்கி உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளையும் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான தேவையையும் கருத்தில் கொள்ளும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “குறைந்த வட்டி விகிதத்தை நோக்கிய ஒரு படிப்படியான நகர்வு கூட கடன் தேவையை அதிகரிக்கவும் நுகர்வோர் மனநிலையை உயர்த்தவும் உதவும். இருப்பினும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க ஏதேனும் கொள்கை மாற்றம் அளவாகவே இருக்கும்.” என்றும் கூறியுள்ளார். MPC கூட்டம் நாளை நடைபெறவுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் மற்றும் கடன் வாங்குபவர்கள் இருவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். வட்டி விகிதம் குறைந்தால், கடன்கள் சற்று மலிவாகலாம். ஆனால், மேலும் தளர்வுகளைச் செய்வதற்கு முன் தெளிவான பொருளாதார சமிக்ஞைகளுக்காக ரிசர்வ் வங்கி காத்திருக்கவும் வாய்ப்புள்ளது.
