திட்டங்களும், எதிர்பார்ப்புகளும் எப்போதும் பாரம் என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்தடுத்து பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பண்ணையாரும் பத்மினியும், நானும் ரெளடி தான் என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகராக உருவெடுத்துள்ளார்.
பல படங்களில் ஹீரோவாக நடித்த விஜய் சேதுபதி ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக களமிறங்கினார். இதையடுத்து, மாஸ்டர், விக்ரம் போன்ற பல படங்களில் வில்லனாக தனது நடிப்பால் மிரட்டி இருப்பார்.
விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் வேற லெவல் ஹிட் ரேஞ்சுக்கு சென்றதால், அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கான வரவேற்பு குறையத் தொடங்கியது. இதனால், இனி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என விஜய் சேதுபதி தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 14) விஜய் சேதுபதியின் 50வது படமான “மகாராஜா” திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் மகாராஜா படத்திற்கான புரோமோசன் நிகழ்ச்சி ஒன்றில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், “நான் 50 படங்களில் நடித்து விட்டேன். உங்களது அடுத்த திட்டம் என்ன என்று என்னிடம் பலர் கேட்கிறார்கள்.
திட்டங்களும், எதிர்பார்ப்புகளும் எப்போதும் பாரம்தான். அதனால், தினமும் கேமரா முன்னால் புதிதாக செல்வது போலவே செல்கிறேன். நான் நடித்து இதுவரை 50 படங்கள் மட்டுமே திரைக்கு வந்து இருக்கலாம். ஆனால், நான் 500க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டு இருக்கிறேன்.
எத்தனையோ பேரை சந்தித்திருக்கிறேன். வெற்றிகளை பார்த்தேன். தோல்விகளை சந்தித்தேன். அதன்மூலம், எவ்வளவோ அனுபவங்களை சம்பாதித்திருக்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த பயணம்.
முன்னணி கதாநாயகனாக இருக்கும்போதும் ஏன் மற்ற நடிகர்களுக்கு குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறீர்கள் என கேள்வி கேட்கிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய், சிரஞ்சீவி, ஷாருக்கான் போன்றவர்கள் மீது எனக்கு இருந்த அன்பு காரணமாகவே அவர்கள் படங்களில் நடித்தேன்.
தற்போது தமிழில் 3 படங்களிலும், இந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். முன்னேற வேண்டும் என்றால் யார் அறிவுரையும் கேட்காதீர்கள்.
ஒவ்வொரு மனிதனின் விரல் ரேகை, கண் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். அதைப்போல, ஒவ்வொருவரின் சிந்தனையும் தனித்தனியாக இருக்கும். நீங்கள் நீங்களாகவே இருக்க முயற்சி செய்யுங்கள்.
அனைவரது வாழ்வும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. உங்களது சிந்தனையை வைத்து வளர்ச்சியடைய முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக வளர்ச்சியடைய முடியும்” என பேட்டியளித்தார் விஜய் சேதுபதி.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களவைத் தேர்தல் வெற்றி : ஜி7 மாநாட்டில் மோடி பெருமிதம்!
சூரியின் உழைப்பு அசாதாரணமானது : புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன்