தேர்வுக் கட்டணம் 2 மடங்காக உயர்வு: மாணவர்கள் போராட்டம்!

Published On:

| By admin

இந்தியா முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, பள்ளிக் கல்லூரிகள் மூடப்பட்டன.

பின்னர் கொரோனா நோய் பரவல் குறைய தொடங்கியபோது கடந்த 2021-22ம் கல்வி ஆண்டை முன்னிட்டு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளிகள் கடந்த செப்டம்பர் மாதமும் 1ம் வகுப்பு முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதமும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதற்கிடையே உருமாறிய கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் பரவல் தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக நேரடி வகுப்புகள் தடை செய்யப்பட்டு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுக் கூட்டத்தில் நடப்பாண்டிற்கான மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தேர்வு கட்டணம் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்வு கட்டணம் இரண்டு மடங்கு கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாரதிதாசன் பல்கலைக்கழக நிர்வாகம் தேர்வு கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் பழைய தேர்வு கட்டணத்தை உடனே அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மன்னை ராஜகோபால சுவாமி அரசினர் கலைக் கல்லுரியில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் கல்லூரி வளாகத்தில் இரண்டாவது நாளாக கண்டன முழக்கங்கள் எழுப்பி உள்ளிருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. கொரோனா முடிந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது படிப்பிற்கும் பொருளாதார பிரச்சினைகள் வருவது கவலைக்குரிய விஷயம். இதில் தமிழக அரசு கவனம் செலுத்தி ஒரு தீர்வு கொண்டுவரவேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share