முதலில் மின்வெட்டை சீரமைங்க; அப்புறம் துறையை சீரமைக்கலாம்.. செந்தில் பாலாஜி காட்டம்

By Pandeeswari Gurusamy

|

Published on 4 Jun 2026, 2:58 PM

Senthil balaji

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டுப் பிரச்சினைக்குப் புதிய தவெக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கோவை தெற்கு தொகுதியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இனி வார்டுகள் வாரியாக, தெருக்கள் வாரியாக மக்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் முழுமையாகக் கேட்டறிந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்” என்றார்.

ADVERTISEMENT

இதைதொடர்ந்து மின்வாரியத்தில், முக்கிய டெண்டர் தொடர்புடைய ஹார்ட் டிஸ்க்குகள் மாயமான விவகாரம் மற்றும் “சிலர் தனிப்பட்ட முறையில் மிரட்டிப் பார்க்கின்றனர்” என மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியது குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டில் ஒரு அமைச்சரையே மிரட்டும் அளவிற்கு ஒருவருக்குத் துணிச்சல் இருக்கிறது என்றால், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது என்பதை மக்கள் பார்க்க வேண்டும். ஒரு அமைச்சருக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாமானிய மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார்.

ADVERTISEMENT

மின்வெட்டு – ஆய்வுக் கூட்டம் இல்லை

“சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகிறது. மக்கள் மின்வெட்டுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

வழக்கமாக மின்துறை அமைச்சர் உயர் அதிகாரிகளுடன் (CMD, Director, CE, SE) ஆய்வுக் கூட்டம் நடத்தி, கோடைக்கால மின் தேவை, இருப்பு, புதிய கொள்முதல் உள்ளிட்டவற்றை மதிப்பீடு செய்வார். ஆனால், தவெக அரசு பொறுப்பேற்றது முதல் தற்போதைய மின்துறை அமைச்சர் CE, SE அளவிலான முழுமையான ஆய்வுக் கூட்டங்களைக் கூட நடத்தவில்லை. அலுவலகத்துக்கு வந்து உயர் அதிகாரிகளை மட்டும் பார்த்துவிட்டுச் செல்கிறார்; கள நிலவரத்தை அறியவில்லை.

ADVERTISEMENT

மின்சாரத் துறை என்பது மற்ற துறைகளைப் போல அல்ல; உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத் துறை. எனவே, துறை அமைச்சர் முழுமையான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி மின்வெட்டுப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்” என்றார்.

எங்கள் காலத்தில் சீரான மின்விநியோகம்

“எங்கள் தலைவர் முதலமைச்சராக இருந்தபோது, தேர்தல் பதிவு எண் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 29 நாட்களில்கூட, 21,307 மெகாவாட் உச்சபட்ச மின் தேவை இருந்தபோதும் எந்தவொரு தடையுமின்றிச் சீராக மின்சாரம் வழங்கப்பட்டது. அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்றினர்” என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

டெண்டர் & மின்னகம் திட்டம்

டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து பேசுகையில் “மின்வாரிய டெண்டர்கள் அனைத்தும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய வாரியத்தின் ஒப்புதலுடன் தான் இறுதி செய்யப்படுகின்றன. புதிதாக மூன்று குழுக்கள் அமைப்பது வெறும் தோற்றத்தை உருவாக்கும் செயல். கடந்த 2021-ல் எங்கள் தலைவர் தொடங்கி வைத்த திட்டம் இது. 30 லட்சத்திற்கும் மேற்பட்ட புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டது. இப்போது புதிய திட்டம் போலச் சொல்வது தவறு. அமைச்சரின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்கவே இப்படி மாற்றுக் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்” என்றார்.

கடன் விவகாரம்

“நாங்கள் ஆட்சிக்கு வரும்போது 1.55 லட்சம் கோடி கடன் இருந்தது. ஆண்டுக்கு 15,000 கோடி வட்டி கட்டுகிறோம். ஐந்து ஆண்டுகளில் 75 ஆயிரம் கோடி வட்டி கட்டியுள்ளோம். எனவே, 2.5 லட்சம் கோடி என்பது இயல்பானதுதான்.

இதுதவிர, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசு மின்வாரியத்துக்கு அளித்த சுமார் 70,000 கோடி நிதியை குறித்து அமைச்சர் சொல்லவில்லை” என்றார்.

இறுதியாக, “ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது, துறையைச் சீரமைக்கப் போகிறோம் எனச் சாக்குப்போக்குச் சொல்லாமல், முதலில் மின்வெட்டைப் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். அதுதான் மக்களின் அடிப்படைத் தேவை” என்று வலியுறுத்தினார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel