நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் – கயல்விழி தம்பதியினருக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்துள்ள நிலையில், தமிழக முன்னாள் அமைச்சரும், திமுக சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் மேள தாளங்களுடன் நேரில் சென்று சீர் கொடுத்து வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 2013-ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 7 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இரண்டாவதாகப் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், சீமானின் வீட்டிற்குத் தனது ஆதரவாளர்களுடன் மேள தாளங்கள் முழங்க, தட்டுகளில் பழங்கள் மற்றும் சீர்வரிசைப் பொருட்களுடன் திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சென்றார். சீமான் தனது வீட்டு வாசலிலேயே நின்று அவரை இன்முகத்தோடு வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து, சீமானின் இரண்டாவது பெண் குழந்தைக்கு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்கச் செயின் அணிவித்து, தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
