நடப்பு ஐபில் தொடரில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ex indian player give advise to lsg sajeev goenka
ஹைதராபாத் அணியை வீழ்த்திய நிலையில், டெல்லி மற்றும் பஞ்சாப் அணியிடம் பரிதாபமாக தோற்றது லக்னோ அணி.
அதிலும் அந்த அணியின் புதிய கேப்டனான ரிஷப் பண்ட் நடப்புத் தொடரில் சோபிக்க தவறியுள்ளார்.
அவர் கடந்த மூன்று போட்டிகளில் 0, 15, 2 என மொத்தம் 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இது லக்னோ அணியின் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
அந்த அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்காவும் ரிஷப் பந்தின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளார்.
அதனை அப்படியே மைதானத்தில் வீரர்களிடம் அவர் வெளிப்படுத்துவது சர்ச்சையாகி உள்ளது.

கடந்த மார்ச் 24ஆம் தேதி டெல்லி மற்றும் எப்ரல் 1ஆம் தேதி பஞ்சாப் அணிகளுக்கு எதிராக லக்னோ அணி தோல்வியை தழுவியது. அப்போது மைதானத்தில் வைத்தே கேப்டன் ரிஷப் பண்டிடம் கோபமாக பேசினார். இது சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து பலரும் கோயங்காவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் 1983 உலகக் கோப்பை வென்றவரும் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான மதன் லால், கோயங்காவுக்கு ஒரு அறிவுரை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “ரிஷப்புக்கும் சஞ்சீவ் கோயங்காவுக்கும் இடையேயான விவாதம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதெல்லாம் மைதானத்தை கடந்து உள்ளே வைத்துக்கொள்ளுங்கள். வீரர்கள் விளையாட்டை சுதந்திரமாக ரசித்து விளையாடட்டும். டி20 கிரிக்கெட் கணிக்க முடியாதது” என மதன் லால் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்வியின் போது, அப்போது கேப்டனாக இருந்த கே.எல்.ராகுலை ரசிகர்கள் முன்பு கடுமையாக பேசினார். அதன் எதிரொலியாக தான், லக்னோ அணியில் இருந்து ராகுல் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.