முதல்வருக்கு பதில் தீரன் சின்னமலை சிலையை திறக்கும் முன்னாள் ஆளுநர்: நடந்தது என்ன?

Published On:

| By Kavi

தர்மபுரி மாவட்டத்தில்  தனியார் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை சிலையை முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம் திறந்து வைக்க இருக்கிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி  உரிமையாளரும் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் சங்கத்தின் தலைவருமான சந்திரசேகர், தர்மபுரி மாவட்டத்தில் அரூர் பைபாஸ் சாலையில் தனது சங்கத்திற்கு சொந்தமான திருமண மண்டப வளாகத்தில் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலையை நிறுவினார்.

சுமார் ரூ.50 லட்சம் செலவில் இச்சிலை நிறுவப்பட்டு, சுமார் பத்தாயிரம் பேர் அமரும் வகையில் விழா பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. இச்சிலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க வேண்டும் என தீவிரமான முயற்சி செய்தார் சந்திரசேகர்,
இதற்காக தர்மபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்  ஈஸ்வரனும் முயற்சி செய்தனர், பழனியப்பன் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் உதவியாளர் தினேஷிடமும் பேசி வந்தார்.

இன்னொரு பக்கம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்,  “தீரன் சின்னமலை சிலையை நமது சமுதாயத்தை சேர்ந்தவர் திறப்பதுதான் நல்லது, அதனால் எடப்பாடி பழனிசாமியை வைத்து  விழா நடத்தலாமே?” என்று  அழுத்தம் கொடுத்தனர்.

ஆனால்… சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் தரப்பில், முதல்வர் வரவில்லை என்றால் முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கேரளா முன்னாள் கவர்னருமான சதாசிவத்தை திறக்க வைக்க முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடித்து கொடுத்து வந்தனர்.

இதையறிந்த திமுக மாவட்ட செயலாளர் பழனியப்பன் கொங்கு கவுண்டர்கள் சங்கத்தின் தலைவர் சந்திரசேகரை சந்தித்து, “கொஞ்சம் பொறுங்கள்…முதல்வர் ஸ்டாலினை வைத்து திறக்கலாம். அப்படி நேரடியாக வரவில்லை என்றால், காணொலி மூலமாக திறப்பு விழா செய்யலாம்” என்று சமரசம் செய்து பார்த்தார்,

ஆனால் அதை மறுத்த சந்திரசேகர்,  “எத்தனை மாதம் காத்திருப்பது, இன்னாள் முதல்வரும் வேண்டாம்… முன்னாள் முதல்வரும் வேண்டாம்… டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி கேரளா முன்னாள் கவர்னர் சதாசிவமே திறக்கட்டும்” என முடிவெடுத்து சொல்லிவிட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 8) காலை 10.30 மணியளவில், சந்திரசேகர் ஆதரவாளர்கள் அரூரிலிந்து டூ வீலர்களில் ஊர்வலமாக சென்று அழைப்பிதழ் கொடுக்க புறப்பட்டனர். அவர்களை, அனுமதி இல்லாமல் போகக்கூடாது என்று காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதனால் கோபமான கொங்கு சமூகத்தினர் ஒன்றிணைந்து 10ஆம் தேதி சிலையை திறப்போம் என உறுதி எடுத்துள்ளனர்.

கொங்கு சமூக வாக்குகளை குறிவைத்து போராடிய திமுக தன்னை தேடி வந்ததை தவறவிட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “நான் திறக்க வில்லை என்றால் என்ன? சமூகத்தைச் சேர்ந்தவர் திறக்கட்டும்” என மறைமுகமாக ஆதரவு கொடுத்ததாக சொல்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.

சந்திரசேகரன் தலைமையிலான கொங்கு கவுண்டர்கள் சங்கத்தினர் தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மாவட்டங்களில் கணிசமான அளவில் உள்ளனர்.

இவரது அறக்கட்டளையின் சார்பில் அரசுக்கு பல இடங்கள் கொடுத்துள்ளார்கள்.  பல துறைகளுக்கு நிதி உதவியும் செய்துள்ளனர்.

” சிலை திறப்புக்காக முதல்வரை முதலில் தேடி வந்த கொங்கு கவுண்டர்கள் சங்க நிர்வாகிகளை  தவறவிட்டுவிட்டது மட்டுமல்ல…  அந்த சங்கத்தின் தலைவர் சந்திரசேகரையே போலீஸை வைத்து கைது செய்து தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறார்கள். இதெல்லாம் முதல்வரின் கவனத்துக்கு செல்கிறதா இல்லையா?”  என கவலையில் உள்ளனர் தர்மபுரி திமுகவினர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-வணங்காமுடி

பலமான பெங்கால் வாரியர்சை வீழ்த்தி… வெற்றியை தக்க வைக்குமா தமிழ் தலைவாஸ்?

சென்னை வெள்ளம்: விசாரணை நடத்த மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்!

“கடின உழைப்பு வீண் போகாது” : 70 மணி நேர வேலை குறித்து நாராயண மூர்த்தி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share