ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், டெல்லி சென்று கடந்த 15ஆம் தேதி மீண்டும் சென்னை திரும்பினார்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். “லேசான இருமல் மற்றும் நுரையீரல் தொற்றுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வந்தார். குணமடைந்து வருகிறார் என மருத்துவர் மூர்த்தி தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து அவருக்கு லேசான கொரோனா பாதிப்பு மற்றும் இதய தமனி நோய் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்தது.
இந்தசூழலில் நேற்று முதல் எக்ஸ்பிபி வகை கொரோனா திரிபால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் அவர் நலமுடன் இருப்பதாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் புகைப்படம் வெளியிட்டனர்.
அவரது முகநூல் பக்கத்திலும், “ உடல் நலம்பெற வாழ்த்திய அனைத்து நல்லுங்களுக்கும் இதயம் கனிந்த நன்றி. சிறிது ஓய்வுக்கு பின்னர் விரைவில் சட்டமன்ற பணிகளுக்கு திரும்ப ஆர்வமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தசூழலில் இன்று (மார்ச் 22) பகல் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், “கடந்த 15ஆம் தேதி இதய தமனி நோய், கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு மற்றும் கொரோனா பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கன்ஜெஸ்டிவ் இதய செயலிழப்பு பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
2026 வரை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி செல்லும்: ஓபிஎஸ் தரப்பு வாதம்!