தொழில் நுட்பம், வேளாண்மை ஒருங்கிணைக்கப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Monisha

everyone need knowledge of agriculture

வேளாண் அறிவு என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல அனைவரும் பெற்றாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி கேர் கல்லூரி மைதானத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 27) தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்வில் துறை அமைச்சரான  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அவரோடு திருச்சி மாவட்ட அமைச்சரான நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,  பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வேளாண் துறையை தலைசிறந்த துறையாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாற்றியிருக்கிறார். மற்ற துறைகளை போல வேளாண் துறையை நினைத்த உடனே வளர்த்துவிட முடியாது. மற்ற துறைகளை வளர்க்க நிதிவளம் இருந்தால் மட்டும் போதும். ஆனால் வேளாண் துறையை வளர்க்க நிதிவளத்துடன் நீர்வளமும் தேவை.

everyone need knowledge of agriculture

ADVERTISEMENT

வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கும் வகையில் வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பல்வேறு புதிய திட்டங்களை நாம் தொடங்கியிருக்கிறோம். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், வேளான் நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம், நீர் பாசன நவீனமயமாக்குதல் திட்டம், வேளாண் தொழில்நுட்ப மேலாண் முகமை, மண் வளம் மேலாண்மை, இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்குதல் ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்படுகிறன.

நிலத்தடி நீரை பயன்படுத்தி உழவர்கள் அதிக பாசன பரப்பில் வேளாண் செய்ய ஏதுவாக கடந்த 2 ஆண்டுகளில் 1 லட்சத்து 50 ஆயிரம் புதிய மின் இணைப்புகளை வழங்கி சாதனை படைத்துள்ளது. அந்த சாதனை பயணத்தின் தொடர்ச்சியாக மேலும் 50 ஆயிரம் இலவச மின் இணைப்புகள் இந்த விழாவில் வழங்கப்பட உள்ளன.

ADVERTISEMENT

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் இதுவரை 5,201 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு முதல் 2,504 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.

2023-24 ஆம் ஆண்டை உலக சிறுதானிய ஆண்டாக நாம் கொண்டாடவிருக்கிறோம். உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 1990 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தவர் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த  கலைஞர்தான்.

கடந்த 10 ஆண்டு காலம் தமிழ்நாட்டை ஒரு கட்சி ஆண்டது. அந்த 10 ஆண்டு காலத்தில் மொத்தமே 2 லட்சத்து 25 ஆயிரம் வேளாண் மின் இணைப்புகள் மட்டும் தான் அவர்களால் வழங்கப்பட்டன. ஆனால் நாம் இரண்டு ஆண்டு காலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகளை வழங்கியிருக்கிறோம்.

இயந்திரங்கள், தொழிற்சாலைகள், துணிநூல்களுக்கு கண்காட்சி நடத்துவது போல வேளாண்மைக்கு கண்காட்சி நடத்துவது மிக மிக அவசியமானது. வேளாண்மைத் துறை அதிகமாக வளர்ந்து வருகிறது என்பதை இதுபோன்ற கண்காட்சி மூலமாக நாம் சொல்லலாம்.

நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண்மை இயந்திரங்கள், மதிப்பு கூட்டும் தொழிற் நுட்பங்கள் ஏராளமாக வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த அடிப்படை தகவல்களை உழவர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேளாண் துறை மாணவர்களுக்கும் அறிமுகம் செய்தாக வேண்டும். அதற்காக தான் இதுபோன்ற கண்காட்சிகள் அவசியமாகின்றன.

உழவர்களின் உற்பத்தி அதிகமாக வேண்டுமானால், அவர்களது உற்பத்தி பொருட்களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டுமானால், வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தப்பட வேண்டும்.

உயர்ந்த விளைச்சல் தரவல்ல புதிய ரகங்கள், பாரம்பரிய நெல் ரகங்கள், வருமானத்தை பெருக்க நவீன தொழில்நுட்பங்கள், உக்திகள், நவீன வேளாண் இயந்திரங்கள், சூரிய சக்தி மூலமாக இயங்கும் கருவிகள் போன்றவைகளை உழவர்களுக்கு ஊட்டுவதற்கு இது போன்ற சங்கமங்கள் தேவை.

வேளாண்மை என்பது வாழ்க்கையாகப் பண்பாடாக இருந்தாலும், அது லாபம் தரும் தொழிலாக முழுமையாக இன்னும் மாறவில்லை. அப்படி அது உயர்த்தப்பட வேண்டும். உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டும் காலமெல்லாம் இருந்துவிடக் கூடாது. அவர்களே விற்பனையாளர்களாக மாறவேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன் தான் உழவர் சந்தை அமைக்கப்பட்டது.

வேளாண் என்பது நிலமிருப்பவர்கள் மட்டும் பார்க்கும் தொழிலாக இல்லாமல், விரும்பியவர்கள் அனைவரும் பார்க்கும் தொழிலாக மாற வேண்டும். இன்றைக்கு நிலத்தை விட அதிக மதிப்பு கொண்டது ஏதுமில்லை. அத்தகைய நிலத்தை வைத்திருப்பவர்களை மகிழ்ச்சியுடையவர்களாக மாற்ற வேண்டும்.

உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால் வேளாண் என்பது வர்த்தக தொழிலாக மாறும். அதற்கு இதுபோன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும். வேளாண் அறிவு என்பது உழவர்களுக்கு மட்டுமல்ல மற்ற அனைவரும் பெற்றாக வேண்டும்” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

மோனிஷா

கருப்பு உடையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்: 6வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

ஒரே நாளில் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் ’யோக்கியன்’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share