மக்களவைக்கு வராத திமுக எம்.பி பார்த்திபன் கூட சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதில் எங்கு நியாயம் இருக்கிறது என்று திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையிலிருந்து கனிமொழி, ஜோதிமணி, சு.வெங்கடேசன் என தமிழக எம்.பிக்கள் உட்பட மொத்தம் 14 பேர் இன்று (டிசம்பர் 14) மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மக்களவையில் இருவர் அத்துமீறி நுழைந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்று அமளியில் ஈடுபட்டதால் இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி.கனிமொழி, “இருவர் அத்துமீறி உள்ளே நுழைந்த விவகாரத்தில் அவர்களுக்கு பாஸ் வழங்கிய எம்.பி. உள்ளே இருக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திரிணமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா விவகாரத்தில் என்ன நடந்தது என நாம் பார்த்தோம். விசாரணை கூட முழுமையடையாமல் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆனால் பாஜக எம்.பி சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. மக்களவையில் எங்களுடன் அமர்ந்திருக்கிறார். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் விளக்கமளிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினாலும், அதை செய்ய அவர்கள் தயாராக இல்லை.
நாங்கள் எதிர்ப்புத் தெரிவித்தால் எதிர்க்கட்சி எம்.பி,க்களை சஸ்பெண்ட் செய்கிறார்கள். இதுவரை 14 மக்களவை எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்திருக்கின்றனர். இதில் ஜனநாயகம் எங்கிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர், “எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்துவிட்டு, அவர்கள் மட்டும் கூட்டத்தொடரை நடத்தி பாதுகாப்பாக நடத்திவிட்டோம் என்ற கூறவும் தயங்கமாட்டார்கள்.
திமுக எம்.பி.பார்த்திபன் இன்று அவைக்கே வரவில்லை. அப்படிப்பட்ட ஒருவரை அமளியில் ஈடுபட்டார் என்று சஸ்பெண்ட் செய்கிறார்கள் என்றால் எந்தளவுக்கு நியாயமாக செயல்படுகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 10, 15 பேரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமே தவிர, யார் மீது தவறு இருக்கிறது, இல்லை என்பதையெல்லாம் அவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. கேள்வி கேட்பவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அவ்வளவுதான்” என்றார் கனிமொழி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
