அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் திமுக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி ஜூலை 20-ஆம் தேதி அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தக்காளி, இஞ்சி,பூண்டு போன்ற காய்கறி மற்றும் பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஜூலை 10-ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி மத்திய உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதினார்.
இந்தநிலையில் விலைவாசி உயர்வு மற்றும் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டி அதிமுக போராட்டத்தை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாண்டு காலத்தில், தமிழ்நாட்டில் மக்கள் வாழ்வே கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பீன்ஸ், அவரைக்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகளும், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, புளி, சீரகம் உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் தற்போது கடுமையாக உயர்ந்துள்ளது.
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவதாக வெற்றுத் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசு, அதை முறையாக செயல்படுத்தவில்லை. விலைவாசி உயர்வு காரணமாக, சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலங்களின்போது, இயற்கை இடர்ப்பாடுகளாலும், இன்னும் சில காரணங்களாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு ஏற்படும் நேரங்களில் தனிக் கவனம் செலுத்தி, அதற்கு ஏற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அண்டை மாநிலங்களில் இருந்து காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலைகள் மூலமாக மக்களின் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்பட்டதுடன், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் வைத்தது அதிமுக அரசு என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
10 ஆண்டு காலமாக மறந்து போயிருந்த மின்வெட்டு, நிர்வாகத் திறனற்ற திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டால் சிறு, குறு தொழில் முனைவோர் செய்வதறியாது கலங்கி நின்ற நேரத்தில் மூன்று மடங்கிற்கும் மேலான மின்கட்டண உயர்வு என்ற பேரிடியை இறக்கியது இந்த திமுக அரசு. அதைத் தொடர்ந்து சொத்து வரி, வீட்டு வரி 100 சதவீதம், கடை வரி 150 சதவீதம் வரை உயர்வு – இதன் காரணமாக வீட்டு வாடகை உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, வெளியூர் செல்லும் பேருந்துகளின் கட்டணம் உயர அனுமதித்தது திமுக அரசு.
பத்திரப் பதிவுத் துறையில் மக்கள் தங்கள் சொத்துக்களை சந்ததியினருக்கு பெயர் மாற்றம் செய்தல், குடியிருப்பதற்கு மனை வாங்குதல், சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெறுதல் உள்ளிட்ட பதிவுகளுக்கு பல மடங்கு கட்டணங்களை உயர்த்தி, மக்களை மேலும் கடனாளிகளாக ஆக்கப் பார்க்கிறது.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கிறார் முதல்வர் ஸ்டாலின். இத்தகைய மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்நிலையில், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வையும் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதையும் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில், ஜூலை 20-ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஊரெங்கும் வெள்ளம்… குடிக்க தண்ணியில்ல! விநோத வேதனையில் டெல்லி
மகளிருக்கு மாதம் ஆயிரம்- முழு பொறுப்பும் கலெக்டர்களிடம்! -ஸ்டாலின் அறிவிப்பு!
![]()
