கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல்: கோடை வெயிலுக்கு குட்பை சொல்ல… இதை ‘மிஸ்’ பண்ணாதீங்க!

Published On:

| By christopher

escape this summer with natural drink

அக்னி நட்சத்திரம் இன்னும் அறிவிப்பாகவில்லை. ஆனால் அதற்குள் கோடை அச்சுறுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் நலிவு கண்டவர்களை கோடை கடுமையாக வாட்டுகிறது. ஆரோக்கியமான தேகம் கொண்ட இளைஞர்களும், உடலின் நீரேற்றத்தை முறையாக பராமரிக்காவிடில் வெப்ப அலை அவர்களையும் விட்டு வைக்காது. escape this summer with natural drink

கொளுத்தும் வெயில், அக்னி நட்சத்திரம், வெப்ப அலை என எதுவாக இருப்பினும், உடலின் நீரேற்றத்தை முறையாக பராமரிக்கும் வகையில் உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். கோடையில் எளிதாகக் கிடைக்கும், நாம் நன்கறிந்த, எளிமையான இவற்றை உணவில் போதுமான அளவுக்கு சேர்த்துக்கொள்வது, கோடையை திடமாக எதிர்கொள்வதற்கான நீரேற்றத்துக்கு உதவும். கூடவே கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விட்டமின், மினரல் உள்ளிட்டவற்றின் பற்றாக்குறையையும் இவை ஈடு செய்யும்.

அந்த வகையில்… செயற்கையான பானங்கள், சோடா, கோலா ஆகியவற்றைவிட இயற்கையாக கிடைக்கும் இந்த அமுது இளநீர், கோடையில் உடல் இழக்கும் நீர்ச்சத்தினை வெகுவாக ஈடுகட்டும். கூடவே எலக்ட்ரோலைட்டுகளை செறிவோடு வழங்கவும் செய்யும். இயற்கையான என்சைம்கள், தாதுக்கள், வைட்டமின்கள் ஆகியவற்றோடு, உடலின் சோடியம் மற்றும் பொட்டசியம் அளவை மீட்டெடுக்கவும் இளநீர் உதவும்.

தர்பூசணியில் 90 சதவீதத்துக்கும் மேலாக நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. கூடவே எலக்ட்ரோலைட்டுகள், அவசியமான வைட்டமின்களையும் தர்பூசணி வாரி வழங்கும். உடலின் நீரேற்றத்தை பராமரித்து குளிர்ச்சியாகவும் வைத்திருப்பதில் தர்பூசணிக்கு ஈடுஇணை கிடையாது.

நீர்ச்சத்து அதிகம்; அதே வேளையில் கலோரிகள் குறைவு. எனவே டயட்டில் இருப்பவர்கள் கூட வெள்ளரியை இஷ்டத்துக்கு வெட்டலாம். அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், சாலட் போன்று வேறு உணவுகளுக்கும் உதவியாக சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ, பி மற்றும் கே ஆகியவை வெள்ளரியில் கிடைக்கும்.

முலாம்பழம் குளிர்ச்சியோடு, பலவகையிலான சத்துகளையும் வழங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, இதய ஆரோக்கியத்தின் மேம்பாடு, பார்வை சீரமைப்பு, உடல் எடைக் குறைப்பு, குடல் ஆரோக்கியத்தின் மேம்பாடு என ஏராளமான அனுகூலங்களை முலாம்பழம் சேர்க்கும்.

கோடையில் எளிதில் கிடைக்கும் இவற்றைக் கொண்டு உடலின் நீரேற்றத்தை முறையாக பராமரிக்கவும், இதர சத்துகளை பெறவும் செய்யலாம். கோடை நோய்களைத் தவிர்க்க இவை பொதுவான குறிப்புகள் மட்டுமே. தனிப்பட்டோர் தங்கள் உடல்நலன் சார்ந்து இவற்றில் உரியதை தவிர்க்கலாம். உதாரணத்துக்கு சிறுநீரகம் சார்ந்த பிரச்சினைகள் கொண்டவர்கள் அவர்களின் உடல்நலத்துக்கேற்ப சிலவற்றை தவிர்ப்பது நல்லது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share