ரம்ஜான்: களைகட்டும் ஈரோடு ஜவுளி சந்தை!

Published On:

| By admin

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு சந்தையில் ஜவுளி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் நடைபெறுவது வழக்கமாகும். இதற்கிடையில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு கடந்த சில வாரங்களாக நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி வியாபாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வந்தது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையானது களைகட்டி காணப்பட்டது.
குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் அதிக அளவில் ஜவுளி சந்தைக்கு வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதே போல சில்லறை விற்பனையும் அமோகமாக நடைபெற்றது.
இதுகுறித்து பேசியுள்ள ஜவுளி வியாபாரிகள், “ரம்ஜான் பண்டிகையையொட்டி இந்த வாரம் ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லறை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. கடந்த பல வாரங்களுக்கு பின்னர் நேற்று கேரளா, ஆந்திராவில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்திருந்தனர். சேலை, வேட்டி, லுங்கி, ஜரிகை வேலைபாடுகள் கொண்ட சுடிதார்கள் அதிக அளவில் விற்பனையானது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். உள்ளூர் பொதுமக்களின் வருகையும் வழக்கத்தை விட அதிகமாகவே காணப்பட்டது. மொத்த வியாபாரம் 40 சதவிகிதத்துக்கு மேலும், சில்லறை வியாபாரம் 60 சதவிகிதம் அளவிலும் நடந்தது மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று கூறியுள்ளனர்.

**-ராஜ்-**

ADVERTISEMENT
Photo of author
admin
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share