டிச.16-ல் ஈரோடு விஜய் பொதுக்கூட்டம்.. ‘இடம்’ தேடும் செங்கோட்டையன்

Published On:

| By Mathi

Erode KAS

ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கான இடத்தை தேர்வு செய்வதில் அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தீவிரம் காட்டி வருகிறார்.

விஜய்யின் கரூர் ரோடு ஷோ நிகழ்ச்சியில் 41 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அத்தகைய ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் விஜய் அண்மையில் காஞ்சிபுரத்தில் கல்லூரி உள் அரங்கில் அப்பகுதி மக்களை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் விஜய் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு டிசம்பர் 9-ந் தேதி பொதுக் கூட்டம் நடத்துகிறார் விஜய். இதற்கும் ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரோட்டில் வரும்16-ந் தேதி விஜய் பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை நடத்த தவெகவில் அண்மையில் இணைந்த அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் அமைப்புச் செயலாளருமான செங்கோட்டையன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

ADVERTISEMENT

ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் ஸ்ரீவாரி மஹால் அருகே விஜய் பொதுக் கூட்டம் நடத்த முதலில் அனுமதி கேட்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் செங்கோட்டையன் தலைமையிலான தவெகவினர் நேரில் சென்று அனுமதி கோரி கடிதம் கொடுத்தனர். இதேபோல மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடமும் அனுமதி கோரி கடிதம் தரப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு 75,000 பேர் வந்து செல்லக் கூடும் எனவும் தவெகவினர் மனுவில் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் பவளத்தாம்பாளையத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுகளில், விஜய் பொதுக் கூட்டம் நடத்துவதற்கான சரியான இடமாக அது இல்லை என தெரிய வந்துள்ளது. குறிப்பாக வாகனங்களை பார்க்கிங் செய்ய அங்கு போதுமான இடம் இல்லை என தெரிய வந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த தகவல் செங்கோட்டையன் உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுக்கும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஈரோடு மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் வேறு ஒரு இடத்தை தவெகவினர் தேடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, பெருந்துறை சரளை என்ற இடத்தை பார்வையிட்டனர்- கோவை- சேலம் நெடுஞ்சாலையில் உள்ள இந்த இடத்தில்தான் திமுக மாநாடு மற்றும் முதல்வரின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இங்கு 75,000 பேர் கூடுவதற்கும் பார்க்கிங் வசதிக்கும் போதுமான இடம் இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த தகவல் ஈரோடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்கின்றனர் தவெக நிர்வாகிகள். இது தொடர்பாக ஆய்வு செய்து வரும் போலீசார் ஓரிரு நாட்களில் தவெகவினருக்கு முடிவை தெரிவிக்க இருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share