இலவச வேட்டி சேலை உற்பத்தியை விரைவில் தொடங்க வலியுறுத்தி இன்று (ஆகஸ்ட் 10) ஈரோட்டில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆகஸ்ட் 7ம் தேதி, தேசிய நெசவாளர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் பாஜக நெசவாளர் அணி சார்பில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”மத்திய அரசு நெசவாளர் நலன் காக்க எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் திமுக அரசு பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை ரேஷன் கடை மூலம் ஏழை மக்களுக்கு விநியோகிக்க இதுவரை நூல் வாங்க டெண்டர் விடவில்லை.
மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1.80 கோடி வேஷ்டி, 1.80 கோடி சேலை வழங்க ஜூலை முதல் உற்பத்தி துவங்கும். அப்போதுதான் ஐந்து மாதங்கள் உற்பத்தி முடிந்து ஜனவரி மாதம் மக்களுக்கு வேட்டி சேலை வழங்கப்படும். ஆனால் வெளிமாநிலங்களில் இந்த வேட்டி சேலை வாங்கி, அதனால் பத்திலிருந்து இருபது சதவீதம் கமிஷன் பெற திமுக திட்டமிடுகிறது. எனவே இந்த டெண்டரை வழங்கவில்லை என்றால் நெசவாளர்களின் சார்பாக தமிழக பாஜக. மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும்” என கூறியிருந்தார்.

இந்த நிலையில், ”விரைவில் தமிழக அரசு இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை வெளியிட வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 300க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் இன்று (ஆகஸ்ட் 10) உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தமிழக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கு 1.80 கோடி வேஷ்டி, 1.80 கோடி சேலை உற்பத்திக்காக ரூ.493 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஜூலை மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. கைத்தறி மூலம் 30 லட்சம் வேஷ்டி, சேலை உற்பத்திக்கான அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், இதுவரை விசைத்தறி மூலம் உற்பத்தி செய்வதற்கான வேலைகள் நடக்கவில்லை.
எனவே, இந்த அரசாணையை தமிழக அரசு விரைவில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் எல்.கே.எம்.சுரேஷ், “இலவச வேட்டி சேலை ஆர்டர் மூலம் 67 ஆயிரம் நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். அதேநேரத்தில், ஏற்கனவே நூல் விலை உயர்வால் நெசவாளர்களின் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில், இலவச வேஷ்டி, சேலை உற்பத்தி தாமதத்தால் மேலும் நெசவாளர்களுக்கு வேலை பறிபோகும் நிலை உள்ளது” என்றார்.
ஜெ.பிரகாஷ்
Comments are closed.