ஈரோடு பிளஸ் 2 மாணவன் அடித்து கொலை- 2 மாணவர்கள் கைது- வெளியான ‘பகீர்’ பின்னணி!

Published On:

| By Mathi

Erode Student Death

ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவன் ஆதித்யாவை அடித்து கொலை செய்ததாக அதே பள்ளியைச் சேர்ந்த சக மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Erode Student Death Case

ஈரோடு குமலன்குட்டையைச் சேர்ந்த சிவா- சத்யா தம்பதியின் மகன் ஆதித்யா (வயது 17). குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த ஆதித்யா, ஜூலை 2-ந் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ஆதித்யாவை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பகுதியில், சாதாரண உடை அணிந்த நிலையில் ஆதித்யா மயங்கிக் கிடந்தார். அவரை உடனடியாக அப்பகுதியினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆதித்யாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். ஆனால் மருத்துவர்களோ, ஆதித்யா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த ஆதித்யாவின் பெற்றோர், மகன் சாவில் மர்மம் இருப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்துக்கு ஆதித்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சென்றனர். அங்கு, ஆதித்யாவை சக மாணவர்கள்தான் அடித்து கொன்றதாக சொல்கின்றனர்.. உண்மையான குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாவிட்டால் குடும்பத்துடன் தீக்குளிப்போம் எனவும் ஆதித்யாவின் பெற்றோர் தெரிவித்தனர். பின்னர் ஆதித்யாவின் பெற்றோர் சிவா-சத்யா ஆகியோருடன் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதும் போலீசாருடன் கடுமையான வாக்குவாதம் நடந்தது.

ADVERTISEMENT

மேலும் ஆதித்யாவை 10 மாணவர்கள் சேர்ந்து அடித்து தாக்கி கொலை செய்யும் வீடியோ பதிவு இருப்பதாகவும் அவர்கள் 10 பேரையும் கைது செய்தால்தான் ஆதித்யாவின் உடலை வாங்குவோம் எனவும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் திட்டவட்டமாக கூறினர்.

இந்நிலையில் குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற போலீசார், மாணவர்கள் மற்றும் மாணவிகளிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தங்களது வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவியிடம் ஆதித்யா பேசுவதை வழக்கமாக வைத்திருந்தாராம்; அந்த மாணவியுடன் ஆதித்யா பேசக் கூடாது என சில மாணவர்கள் அடிக்கடி தகராறு செய்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இதனால் ஆதித்யாவுடன் தகராறில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீசார் தனியே விசாரணை நடத்தியதில், ஆதித்யாவை பள்ளிக்கூடத்துக்கு அருகே உள்ள பகுதியில் வைத்து தாக்கியதை அவர்கள் இருவரும் ஒப்புக் கொண்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆதித்யா பின்னர் உயிரிழந்தது உறுதியானது. இதனால் ஆதித்யாவை தாக்கி மரணத்துக்கு காரணமாக இருந்த 2 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் ஈரோடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share