ஈரோடு கிழக்கு : விலகிய காங்கிரஸ்… திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்

Published On:

| By christopher

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாத நிலையில், திமுகவின் வேட்பாளரை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 11) அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என இந்தியா தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என அக்கட்சியினர் எதிர்பார்த்தனர். அதே வேளையில் இடைத்தேர்தலில் நேரடியாக திமுக வேட்பாளரே போட்டியிட வாய்ப்புள்ளதாக நமது மின்னம்பலம்.காம் தளத்தில் வெளியான ‘டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு வேட்பாளர்… ஸ்டாலினிடம்  உதயநிதி கேட்கும் ஒரே விஷயம்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிடும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று இரவு அறிக்கை வெளியிட்டார்.

அதில், “ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மறைவு அடைந்ததையொட்டி இடைத்தேர்தல் வரவிருக்கிறது.

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்” என கூறியிருந்தார்.

வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிப்பு!

ஈரோடு கிழக்கில் வேட்புமனுத்தாக்கல் நேற்றே தொடங்கிவிட்ட நிலையில், செல்வப்பெருந்தகையின் இந்த அறிவிப்பால், திமுக வேட்பாளர் யார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் வி.சி. சந்திரகுமாரை வேட்பாளராக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வி.சி.சந்திரகுமார் 2011 ஆம் ஆண்டு தேமுதிக சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவானார். பின்னர் அவர் தேமுதிகவிலிருந்து விலகி தனிக் கட்சியை தொடங்கிய அவர், 2016ஆம் ஆண்டு தனது கட்சியினரோடு திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

கிச்சன் கீர்த்தனா : சால்டட் கேரமல் பொங்கல்

ஒரே அசிங்கமா போச்சு… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் சிக்னல்… போலீஸ் ஸ்கெட்ச் ரெடி… சீமான் கைது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share